நாகப்பட்டினம் பகுதியில் பொதுமக்களுக்கு வசதியாகவும், பெரும் பாதகமாகவும் இருப்பது ஷேர் ஆட்டோக்கள் தான். அந்த வகையில் ஷேர் ஆட்டோவில் சென்றவரிடம் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிய சம்பவம் பயணிகள் மத்தியில் ஒரு பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.
நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள் குறைந்த கட்டணத்தில் இயங்கி வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாலசூரியன். இவர் நாகூரிலிருந்து நாகப்பட்டினத்திற்கு பயணிகள் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பக்கத்தில் பயணித்த மற்றொரு இளைஞர் பாலசூரியனின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஆட்டோவில் இருந்து குதித்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளார். பாலசூரியனும் ஆட்டோவில் இருந்து குதித்து, சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிய இளைஞரை பின்தொடர்ந்து ஓடியதுடன் கூச்சலிட்டுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தோர் அந்த நபரை விரட்டி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். போலீஸ் நடத்திய விசாரணையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது வ.உ.சி. நகரைச் சேர்ந்த கார்த்தி என்பது தெரியவந்துள்ளது. அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து ஆட்டோ ஓட்டுனர் ஒருவரிடம் கேட்டோம், "இவர்களால் நேர்மையான ஆட்டோக்காரர்களுக்கும் கெட்ட பெயர் வருகிறது. இங்கே 300க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் ஓடுகிறது. ஐந்து ரூபாய் அதிகபட்சம் பத்து ரூபாய்க்கு மேல நாங்கள் கட்டணம் வாங்குவதில்லை. நாகூருக்கு பக்கத்தில் இருக்கிற பகுதிகளில் குடிகாரர்களை ஆட்டோக்காரர்கள் கையில் வைத்துக்கொண்டு வசதியானவங்களை அழைத்து வரும்போது பயணிகளின் நகைகளை பறித்துக்கொண்டு ஓடவைத்து ஆளுக்குப்பாதியாக பங்கிட்டுக்கொள்ளும் அபாயமும் தொடர்கதையாக இருக்கிறது. தற்போது நடந்ததில் சங்கிலியை பறிகொடுத்தவர், கீழே விழுந்து ஓடியதால் திருட்டுக்கு பின்னனியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டு பிடிக்க முடிந்திருக்கிறது. காவல்துறை இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார்.