சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்த ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சுங்கச்சாவடி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கைது செய்தனர்.
புதிய ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், பழைய ஒய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை புறப்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். மேலும் இன்று காலை சென்னைக்குள் யாரும் வராமல் இருக்க காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் தீவிர சோதனை செய்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், சென்னை வாலாஜா சாலை வழியாக செல்லும் ஒவ்வொரு பேருந்திலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.