சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தொல்லியல் துறை சார்பில், தயாரிக்கப்பட்ட ‘இரும்பின் தொன்மை’ நூலை முதல்வர் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்வில், இரும்பின் பயன்பாடு குறித்த தமிழகத்தின் வரலாற்று ஆய்வுகளை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். முதல்வரின் அறிவிப்பிற்கு அரசியல் தலைவர்கள், வரலாற்று அறிஞர்கள், கல்வியாளர்கள் எனப் பலரும் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.
அந்த வகையில் முதல்வரின் அறிவிப்பு குறித்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் ரகுபதி, “5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ் நிலத்தில் அறிமுகம் ஆகிவிட்டது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆய்வு முடிவுகளை இன்று முதலமைச்சர் உறுதி செய்துள்ளார். தமிழர் நாகரிகத்தையும், பண்பாட்டு வரலாற்றையும் மறைக்க துடித்து பொய் வரலாறு புனைந்து வந்தோரின் பொய்களை எல்லாம் அறிவியல் ஆய்வு மூலம் சுக்கு நூறாக்கிவிட்டார் நமது முதலமைச்சர்.
இந்திய வரலாறு தெற்கில் தமிழ் நிலத்தில் இருந்தே இனி எழுதப்படும். அதை உலகிற்கு உணர்த்திய முதலமைச்சருக்கு ஆயிரம் நன்றிகள்" என்று தெரிவித்திருக்கிறார்.