ஒன்றிய பா.ஜ.க. அரசுடன் கள்ள உறவு வைத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கு எதாவது பாதிப்பு என்றால் குறுக்கே வந்து அதை மடைமாற்றம் செய்வதே எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமியின் கடமை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கடுமையாக தாக்கு பேசியுள்ளார்.
இந்த நிலையில் திண்டுக்கல்லில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழ்நாடு இந்திய திருநாட்டில் இந்த திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தும் அரசாக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு உள்ளது. இந்த திட்டம் தமிழகத்தில் உள்ளது கல்வித்துறை, விளையாட்டுத்துறை, மருத்துவத்துறை உட்பட அனைத்து துறைகளையும் இந்தியாவே போற்றும் அளவிற்கு தமிழகத்தை உயர்த்திய பெருமை முதல்வரையே சேரும். இதுபோல தொழில்துறையையும் உலகளவில் பேச வைத்தவர் முதல்வர் ஸ்டாலின்.
இதைப் பொறுக்காத ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கூஜா தூக்கிக் கொண்டு இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் தளத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்ற அறிக்கையை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ரூ.1,086 கோடி வரை இந்த திட்டத்திற்கான பணத்தை ஒன்றிய அரசு வழங்கவில்லை என்று தமிழக முதல்வர் ஒன்றிய அரசிற்கு கடிதம் அனுப்பியதை அனைவரும் அறிவார்கள். உடனே வழங்க வேண்டும் என்றும், அதுவும் பொங்கலுக்கு முன்பே வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பிரதமருக்கு கடிதம் அனுப்பியும் ஒன்றிய அரசு செவி சாய்க்கவில்லை. இந்த செய்தி தமிழகத்தில் உள்ள அனைத்து பாமரனுக்கு கூட தெரியும்.
எடப்பாடி பழனிச்சாமி செய்திகளை பார்க்கிறாரா? பத்திரிகை படிக்கிறாரா? இல்லை தூங்குகிறாரா? இல்லை தூங்குவதை போல் நடிக்கிறாரா? என்பது கூட தெரியவில்லை. தமிழக முதல்வர் பலமுறை கோரிக்கை விடுத்தும் இன்று வரை அந்த நிதியை கொடுக்கவில்லை. மத்திய அரசு பட்ஜெட்டிலும் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு முறையாக வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுதான் நமது முதல்வரின் கோரிக்கை. தினம் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களுக்கு அந்த வார இறுதியில் பணம் வழங்க வேண்டும் என்பது சட்டமாக உள்ளது. ஆனால் ரூ.1,087 கோடி பாக்கி உள்ள நிலையில் அதற்கு பின்பு ரூ.2,00 கோடி வரை வேலை நடந்துள்ளது.
தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பணிகளை செயல்படுத்தியதில் தமிழகம் என்றும் முதல் இடத்தில் உள்ளது. சென்ற வருடம் 41 கோடி மனித வேலைநாட்களை கொடுத்து சாதனை படைத்துள்ளது. இன்றுவரை 23கோடியே 34 லட்சம் நாட்கள் மனித வேலை கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 கோடி நாட்கள் வேலை வேண்டும் என முதல்வர் ன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஒரு சிறப்பாக செயல்பட கூடிய தமிழக அரசை குறிப்பாக அனைத்து துறைகளிலும் சாதனை படைக்க கூடிய தமிழக அரசை ஏழை மக்கள் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் கருணைமிக்க அரசைக் குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார்.
ஒன்றிய அரசு பணம் வழங்காவிட்டாலும் நூறு நாள் வேலைத்திட்டத்தை நிறுத்தக்கூடாது என்ற நல்நோக்கோடு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிராமங்களில் இந்த திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி வருகிறார். குறிப்பாக தமிழகத்தில் தினமும் 9 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறார். ஆனால் தமிழகத்தில் நூறு நாள் வேலைத்திட்டம் நடைபெறவில்லை என கூறுகிறார். இவர் எங்கு போய் பார்த்தார்? எந்த கிராமத்தில் ஆய்வு செய்தார்? 12,565 பஞ்சாயத்துக்களிலும் தினம் தினம் வேலை நடக்கிறது. இது கூட தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவர் தமிழகத்தில் இருக்கிறாரா? அல்லது பதுங்கு குழியில் பதுங்கி இருக்கிறாரா? என்பது கூட தெரியவில்லை. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் உயர்ந்து வரும் மாநிலமாக உள்ளது. தொழில்துறையில் தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் சிப்காட் அமைக்கப்பட்டு வருகிறது. படித்த பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. சுமார் 20 லட்சம் இளைஞர்களுக்கு அரசு மட்டுமின்றி தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான ஒருகோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற திட்டத்தை நோக்கி அவர் பயணித்து வருகிறார். சென்னையில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் ஒரு கிரீன் லேண்ட் விமான நிலையம் அமைந்துவிடும். உலகமே இன்று தமிழகத்தை உற்றுநோக்குகிறது. காரணம் தொழில் துவங்குவதற்கு உகந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. வெளிநாட்டில் உள்ள தொழில் முதலீட்டாளர்கள் அனைவரும் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். காரணம் இங்கு தொழில் துவங்கினால் பாதுகாப்பாக இருக்கும் என்ற நோக்கத்தோடு தான் வருகிறார்கள். அதற்கு காரணம் தமிழகம் அமைதிப்பூங்காவாக இருப்பது தான்.
தொழில் முதலீட்டாளர்களை தமிழக அரசு இருகரம் கொண்டு வரவேற்று வருகிறது. அவர்களுக்கான தேவைகளை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கிறது. இதனால் தமிழகம் செழிப்பான மாநிலமாக மாறி வருகிறது. பொருளாதார முன்னேற்றத்தில் முதலிடம் பிடிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மும்பை, குஜராத்தை பின் தள்ளிவிட்டு முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும் தமிழகத்தின் வளர்ச்சி பொறுக்காமல் பா.ஜ.க. அரசும் அதனுடன் கள்ள உறவு வைத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் விடும் அறிக்கையை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். ஒரு ட்ரில்லியன் டாலர் முதலீடு வந்துவிட்டால் இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் என்ற அந்தஸ்தை தமிழகம் தொடர்ந்து தக்க வைத்துவிடும்” என்று கூறினார்.
இந்த பேட்டியின் போது தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், பிள்ளையார்நத்தம் முருகேசன், மாநகர துணை மேயர் ராஜப்பா, மாநகர பொருளாளர் மீடியா சரவணன், இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், விவசாய அணி அமைப்பாளர் இல.கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் அக்பர், மாமன்ற உறுப்பினர்கள் நெல்லை சுபாஷ் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் உடன் இருந்தனர்.