கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தில் தனது பெரியம்மா வீட்டில் தங்கி சிதம்பரத்தில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் 17 வயதுடைய சிறுமி. இவர் கடந்த 21ஆம் தேதி முன்பு சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று வயிற்று வலிப்பதாகக் கூறி சிகிச்சைக்குச் சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் இவரைப் பரிசோதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பதைத் தெரிந்து அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் விசாரணையில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மேலும் விசாரித்த போது தனது பெரியப்பா பாபு (வயது 55) என்பவர் வீட்டில் தனியாக இருக்கும் போது வற்புறுத்திக் கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவு செய்ததாகவும் இதைப் பற்றி வெளியே சொன்னால் படிக்க விடமாட்டேன் என மிரட்டியதாகச் சிறுமி கூறியுள்ளார்.
இது குறித்துச் சம்பந்தப்பட்டவரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் நடந்த சம்பவம் உண்மை எனத் தெரியவந்தது. அதன் பின்னர் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிதம்பரம் மகளிர் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். சொந்த பெரியப்பாவே மகளிடம் அத்துமீறிய சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.