பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு, இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பீகாரில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் ஒன்றிய அமைச்சர் ஒருவர் பதவியில் இருந்து விலகப் போவதாக தெரிவித்துள்ளார்.
பீகாரில் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்ஏஎம்) என்ற கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சியின் தலைவராக ஜிதன் ராம் மாஞ்சி என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். 243 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட பீகாரில், ஜிதம் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியில் 4 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். இந்த கட்சி, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அதன் அடிப்படையில், அக்கட்சியின் ஒரே ஒரு எம்.பியான ஜிதன் ராம் மாஞ்சிக்கு மத்திய அமைச்சரவையில் பா.ஜ.க இடம் ஒதுக்கியது. அதன்படி, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சராக ஜிதன் ராம் மாஞ்சி பொறுப்பு வகித்து வருகிறார்.
பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி நேற்று (22-01-25) முங்கரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், “ஜார்க்கண்ட் மற்றும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்களில் நமது கட்சிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சீட் கிடைக்கவில்லை. நான் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று கூறலாம். ஆனால் அது நியாயமா? இந்த மாநிலங்களில் எனக்கு எந்த அந்தஸ்தும் இல்லாததால் நான் புறக்கணிக்கப்பட்டேன். எனவே பீகாரில் நமது பலத்தை நாம் நிரூபிக்க வேண்டும். இதற்காக நான் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது.
நான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் மோதலில் ஈடுபட்டு வருகிறேன் என்று ஒரு சிலர் கூறலாம். ஆனால், நரேந்திர மோடியின் தலைமையிலான கூட்டணியில் கிளர்ச்சி என்ற கேள்விக்கே இடமில்லாத வகையில் உள்ளது. நான் ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன், இதில் மோதல் எதுவும் இல்லை. பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவுக்கு 40 இடங்கள் வேண்டும் என்று விரும்புகிறேன். நமது கட்சி 20 இடங்களுடன் மீண்டும் வந்தால், நமது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அரசு பல நல்ல விஷயங்களைச் செய்துள்ளது. ஆனால் ஒரு வருடத்திற்கும் குறைவான கால முதல்வராக இருந்த காலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அவர் அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை” என்று பேசினார்.