உத்தரப் பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா கடந்த 13ஆம் தேதி முதல் தொடங்கியது. பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வு அடுத்த மாதம் 26ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த நிகழ்வில் பாசி மணிகள் விற்கும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே என்ற பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
அவர் தோற்றம் மற்றும் கண்கள் பலரது கவனத்தை ஈர்த்தது. இதனால் காந்த கண்ணழகி என்றும் சமூக வலைதளங்களில் பயணர்கள் கமெண்ட் செய்து வந்தனர். இதையடுத்து அவர் பிரபலமானதால் அவருடன் ஃபோட்டோ எடுக்க பலர் முயன்றனர். மேலும் அவரை பேட்டியும் சிலர் எடுக்க முயன்றனர்.
இந்த நிலையில் மோனலிசா போஸ்லேவிற்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது தோற்றத்தை பார்த்த பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, தனது புதுப் படத்தில் அவரை நடிகக வைக்க ஆசைப்படுவதாகவும் அதற்காக அவரை அழைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சனோஜ் மிஸ்ரா, ‘தி டைரி ஆஃப் வெஸ்ட் பெங்கால்’, ‘ராம் கி ஜன்மபூமி’ உள்ளிட்ட சில படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.