கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள், தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் எனப் பலதரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றன. குறிப்பாகச் சமூக நல அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முன்னாள் அமைச்சர்கள், கிருமிநாசினி பொருட்கள், மளிகைப் பொருட்கள் போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது கிராமங்களை நோக்கி திமுகவினர் படையெடுக்க துவங்கியுள்ளனர். ஒவ்வொரு ஊராட்சி கிராமங்களிலும் 10 முதல் 20 வரையிலான தூய்மைப் பணியாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள் உள்ளனர். இவர்கள் தினக்கூலித் தொழிலாளர்களாகவும், நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்களாகவும் பணியாற்றி வருகின்றன. இவர்கள் தற்போது கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்படி ஈடுபடுத்தப்பட்டுள்ள இவர்கள் தினமும் கிராம தெருக்களில் கிருமிநாசினி பவுடர் தெளிப்பது, மருந்து அடிப்பது போன்ற பணிகளைச் செய்கின்றனர்.
மக்களைக் காக்க இரவு, பகல் பாராமல் பணிபுரியும் இவர்களுக்கு அரசாங்கம் எந்தவிதச் சிறப்பு ஊதியமும் வழங்கப்படவில்லை. இதனை அறிந்த திமுக அதிரடியாகக் களமிறங்கியுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு திமுக தலைமை விதித்துள்ள உத்தரவுப்படி, முதல் கட்டமாகக் கிராமங்களில் உள்ள தூய்மைப் பணியாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு மளிகைப் பொருட்கள் மற்றும் கிருமிநாசினி பொருட்கள் வழங்க உத்தரவிட்டனர்.
அதன்படி வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில் உட்பட்ட கிராமங்களில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் 500- க்கும் அதிகமானவர்களைத் தனியார் மண்டபங்களுக்கு வரவழைத்த அத்தொகுதியின் எம்.எல்.ஏவும், வேலூர் மாவட்ட திமுக மாவட்டச் செயலாளருமான நந்தகுமார், மளிகைப் பொருட்கள், கிருமிநாசினி போன்றவற்றை வழங்கினார். அதேபோல் அத்தொகுதியில் உள்ள கிராமங்களில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்கள் போன்றவற்றை வழங்கினார். அதைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ விஸ்வநாதன், பேரணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களுக்குச் சென்று இதேபோன்று உதவிகளைச் செய்து வருகிறார்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்.எல்.ஏவான பிச்சாண்டி, தனது தொகுதிக்கு உட்பட்ட மாதலம்பாடி, களஸ்தம்பாடி கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று அக்கிராமப் பொதுமக்களைச் சந்தித்து உடல் நலன் குறித்து விசாரித்தவர், அவர்களுக்கு முககவசம், கையுறை போன்றவற்றை வழங்கினார். தனிமைப்படுத்தப்பட்ட, குடும்பத்தாரால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார். அதோடு, அவர்களுக்குத் தொடர்ச்சியாக மூன்று வேளை உணவு வழங்க வேண்டும் என்றும், அதற்கான நிதியைத் தன்னிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை தொகுதி எம்.பியும், திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளருமான அண்ணாதுரை, துரிஞ்சாபுரம், கலசப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கு ஒவ்வொரு வீடாகச் சென்று முகக்கவசம், கைக்கவசம் போன்றவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் மாவட்ட செயலாளருமான எ.வ.வேலுவின் சார்பில், அவரது தொகுதியில் உள்ள கிராமங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு மளிகைப் பொருட்களை வழங்கச் சொல்லி தந்து அனுப்பியுள்ளார். இப்படிக் குக்கிராமங்களை நோக்கி திமுகவினர் படையெடுத்து சென்றுள்ளது ஆளும்கட்சியான அதிமுகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.