'உங்கள் தொகுதியில் முதல்வர்', 'மக்களைத் தேடி மருத்துவம்', 'இல்லம் தேடி கல்வி' என பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், அண்மையில் 'இன்னுயிர் காப்போம்' என்ற திட்டத்தையும் தொடங்கிவைத்திருந்தார். இந்நிலையில், முதல்வராகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் கலந்துகொண்டார்.
சென்னை கிண்டி எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இன்று (20.12.2021) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், ''பயிற்சி முடிக்கும் மருத்துவ மாணவர்கள் கிராமங்களில் சேவையாற்ற வேண்டும். நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? என்பதை நெஞ்சில் நிறுத்தி மாணவர்கள் பணியாற்ற வேண்டும். மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு எம்ஜிஆர் பெயரைச் சூட்டியது கலைஞர். கரோனா காலத்தில் பொதுமக்களுக்குப் பல்வேறு ஆலோசனைகளை இணையம், தொலைப்பேசி வாயிலாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் விரைவில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட இருக்கிறது. கல்வியையும் ஆராய்ச்சியையும் இரு கண்களாகக் கொண்டு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. இதுவரை உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்த நீங்கள், இனி நாட்டுக்குப் பிள்ளையாக இருக்கப் போகிறீர்கள். மருத்துவப் பட்டத்தைப் பெற்றபிறகு நாட்டுக்குச் சேவையாற்றும் மாவீரர்களாக மாறியுள்ளீர்கள்'' என்றார்.