செஸ் ஒலிம்பியாட் ஜோதி நாடு முழுவதும் பயணித்து தமிழ்நாடு வந்தடைந்தது. ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்கும் விதமாக, கோவையில் மாரத்தானும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
மாமல்லப்புரத்தில் வரும் ஜூலை 28- ஆம் தேதி அன்று 44வது செஸ் ஒலிம்பியாட் தொடங்கவுள்ளது. இதற்காக, முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் தீபம் ஏற்றப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 19- ஆம் தேதி அன்று தீபத்தை ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அதன் ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் சுமார் 75 நகரங்களில் பயணித்த ஒலிம்பியாட் ஜோதி இன்று (25/07/2022) தமிழ்நாடு வந்தடைந்தது.
கோவைக்கு வருகை தந்த ஒலிம்பியாட் ஜோதியை பந்தயசாலையில் மாவட்ட ஆட்சியர் சமீரன் வரவேற்றார். அங்கிருந்து கொடிசியா வரை 8 கி.மீ. தூரத்திற்கு ஜோதியுடன் மாரத்தான் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பரதநாட்டியம், சிலம்பாட்டம் உள்ளிட்டப் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பின்னர், சதுரங்க வடிவிலான கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில், அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்துக் கொண்டனர். கோவையைத் தொடர்ந்து, கன்னியாகுமரி, மதுரை, தஞ்சை ஆகிய நகரங்களில் பயணிக்க உள்ள செஸ் ஒலிம்பியாட் ஜோதி மாமல்லப்புரத்திற்கு வருகைத் தர உள்ளது. பின்னர், மெரினா கடற்கரையில் ஜோதி சங்கமிக்கும்.