கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் நடமாட்டம் முற்றிலும் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. வழக்கமாக மெரினா கடற்கரைக்கு நடைபயிற்சிக்காக வருபவர்கள், அங்கு சுற்றித் திரியும் நாய்களுக்கு பிஸ்கட் வாங்கி போடுவார்கள். இதேபோல் காகம் உள்ளிட்ட பறவைகளுக்கும் சிலர் உணவு அளிப்பார்கள்.
தற்போது ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் ரெகுலராக நடைபயிற்சிக்கு செல்பவர்கள் மெரினா கடற்கரைக்குச் செல்ல முடியவில்லை. இந்த நிலையில் சாலையோரத்தில் சுற்றித்திரியும் நாய்கள், அவ்வப்போது உணவுக்காக வரும் காகங்கள், பறவைகள் உணவுக்காகத் தவித்து வருவதைக் கண்ணால் பார்க்க முடிகிறது.
அப்படிப் பசியோடு இருந்த காகங்களுக்குச் சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே போக்குவரத்து காவலர் ஒருவர் உணவு அளித்தார். இதேபோல உணவு இல்லாமல் பசியோடு நாய்கள் வாடியிருக்கும் என்று நினைத்த ஒரு பெண்மணி தனது இல்லத்தில் இருந்து பிஸ்கட் போன்ற உணவுகளை எடுத்து வந்து அளித்தார்.
அம்மா பசிக்கிதுன்னு அவுங்க சொல்லமாட்டாங்க, அவுங்களுக்குக் கேட்கத் தெரியாது. நாமதான் இதனைப் புரிந்து கொண்டு வாய் இல்லாத இந்த ஜீவன்களுக்கு உதவ வேண்டும் என்கின்றனர் விலங்குகள் நல ஆர்வலர்கள்.
இதுபோன்ற , அசாதாரண நேரத்திலும் "வாடிய உயிரைக் கண்டதும் வாடும்" ஒவ்வொரு உயிரும் தன் தனிப் பெருங்கருணையால் இந்தப் பூமியை உயிர்ப்போடு வைத்துள்ளது.