Looting incidents continue in Erode!

ஈரோடு மூலப்பாளையம், விநாயகர் கோவில் வீதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற தபால் ஊழியர் ஒருவர் வீட்டில், அவர் வெளியூருக்குச் சென்றிருந்த போது 40 பவுன் நகை, 15 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மூலப்பாளையம் விநாயகர் கோவில் தெரு 3-வது வீதியில் உள்ள ஒரு கட்டிட மேஸ்திரி வீடு, அடுத்து ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை ஊழியர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த தொடர் திருட்டு பரபரப்பு அடங்குவதற்குள், ஈரோடு திண்டல் அருகே ஒரு மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஈரோடு திண்டல் பங்காரு நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி 60 வயது லோகநாயகி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன், மகளுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தி இறந்த பிறகு அவர் மனைவி லோகநாயகி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். லோகநாயகியின் சகோதரர் வீடு ஈரோட்டையடுத்த கணபதிபாளையம் என்ற ஊரில் உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு லோகநாயகி அவரது சகோதரர் வீட்டுக்கு கணபதிபாளையம் சென்றுவிட்டார்.

Advertisment

இந்த நிலையில் லோகநாயகி 16ந் தேதி மீண்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை, 35 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து லோகநாயகி தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். கொள்ளை நடந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஈரோட்டில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவம் நடந்து வருவது பொதுமக்களை கடும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.