காவிரிக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் ஜூலை 19 ந் தேதி மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதிறந்தார். 22 ந் தேதி 7 அமைச்சர்கள் பாசனத்திற்காக கல்லணையில் தண்ணீர் திறந்துவிட்டனர். அடுத்த நாளே தஞ்சை அருகே கல்வராயன்கோட்டையில் ஆற்றின் தடுப்பு உடைந்தது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த விவசாயிகள் இன்று வல்லவாரி ஆற்றுப்பால் அருகே சுமார் 500 பேர் திரண்டனர். அங்கு வந்த ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமையில் சாலை மறியலுக்கும் தயிரானார்கள். இந்த தகவலறிந்து அங்கு போலிசார் குவிக்கப்பட்டனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் தொடர்ந்து 5 நாட்களுக்கு 500 கன அடி தண்ணீர் விட அதிகாரிகள் ஒப்புதல எழுதிக் கொடுத்ததால் தற்காலிகமாக மறியல் கைவிடப்பட்டது. அதிகாரிகள் வாக்குறுதிப்படி தண்ணீர் திறக்கவில்லை என்றால் மீண்டும் 15 கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றுகூறி கலைந்து சென்றனர்.
இது குறித்து எம்.எல்.ஏ மெய்யநாதன் கூறியதாவது..
அதிக தண்ணீர் இருந்தும் கடைமடைக்கு தண்ணீர் இன்றி விவசாயிகள் தவிக்கிறார்கள். பிரதான வாய்க்கால் சீரமைக்க ரூ 5 லட்சம் நிதி ஒதுக்கி வேலையே செய்யாமல் நிதி எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர எடப்பாடி துறையிலேயே முறைகேடு நடந்துள்ளதை கண்டுகொள்ளவில்லை. மேலும் 5 நாட்களுக்கு 500 கன அடி தண்ணீர் திறப்பதாக அதிகாரிகள் சொன்னதால் போராட்டத்தை கைவிடுகிறோம். ஆனால் தண்ணீர் வரவில்லை என்றால் மீண்டும் பெரிய போராட்டம் நடக்கும் என்றார்.