சென்னை கிண்டி அருகே சூப்பர் மார்க்கெட்டில் வைத்து இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் கொடுத்த வாக்குமூலம் பகீரை கிளப்பியுள்ளது.
சென்னை கிண்டி அருகே உள்ள வண்டிக்காரன் சாலை பகுதியில் இளைஞர் ஒருவரை இரண்டு பேர் துரத்தி செற்றனர். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிய நிலையில் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குள் புகுந்தார். அதனைத் தொடர்ந்து சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த நபர்கள் கடைக்குள் சிக்கிய அந்த நபரை சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்த கடையின் உரிமையாளர் தாக்குதல் நடத்திய நபர்களை தடுத்து நிறுத்திய போது கத்தியை காட்டி உரிமையாளரை மிரட்டினர். உடனே வெளியே வந்த கடையின் உரிமையாளர் கடையின் ஷட்டரை சாத்தினார். இருவரும் வசமாக உள்ளே சிக்கிக் கொண்டனர்.
உடனடியாக போலீஸ்சாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் ஷட்டரை திறந்து கடைக்குள் சிக்கிக்கொண்ட ஊசி உதயகுமார், ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்தனர். உள்ளே கொலை செய்யப்பட்ட இளைஞர் தினேஷ் என்பதும் அவர் ஆட்டோ ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக சூப்பர் மார்க்கெட் வாசலிலேயே வைத்து போலீசாரும் பொதுமக்களும் விசாரித்தனர். 'ஏண்டா அவன கொலை செஞ்சீங்க' என அங்கிருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு கேட்க, 'எங்களை சாவடிக்கிறேன்னு சொன்னான் அதனால் கொலை செய்தோம்' என பகிரங்கமாக போலீசார் முன்னிலையிலேயே தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வேளச்சேரியைச் சேர்ந்த ரவுடியான குணாவும், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ரவுடி ராபினும் சில ஆண்டுகளுக்கு முன்பு கூட்டாளிகளாக இருந்து வந்துள்ளனர். ஒன்றாக சிறைக்கும் சென்று வந்தனர். அப்பொழுது இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருவரும் பிரிந்தனர். அப்பொழுது குணாவின் கூட்டாளியான தினேஷ் செல்போனில் தொடர்பு கொண்டு ரவுடி ராபினை மிரட்டிய நிலையில் ராபினின் கூட்டாளிகளான ஊசி உதயகுமாரும், மணிவண்ணனும் சேர்ந்து தினேஷை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. மேலும் கொலை செய்த இருவரும் நேற்றுதான் புழல் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வரை எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.