ஆந்திர மாநில காவல் துறை தமிழகத்திற்குள் புகுந்து சட்டவிதிகளை மீறி கைது செய்வதை தடுக்க தமிழக , ஆந்திர அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே சமீபத்தில் செம்மரம் வெட்ட சென்ற 5 தமிழர்கள் அங்குள்ள குளத்தில் பிணமாக மீட்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிறைக்கைதிகள் பாதுகாப்பு சங்க தலைவர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் , செம்மரம் கடத்தியதாக கூறி ஆந்திர காவல்துறையினர் தமிழகத்திற்குள் புகுந்து சட்ட விதிகளை பின்பற்றாமல் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 500 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அங்கு கைது செய்யும் முன்பாக தமிழக டி.ஜி.பி'யிடம் தகவல் தெரிவிக்காமலும் கைது செய்த பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமலும் ஆந்திர மாநில காவல் துறையினர் தொடர்ந்து சட்ட விதிகளை மீறி வருவதாக மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில காவல் துறை தமிழகத்திற்குள் புகுந்து சட்டவிதிகளை மீறி கைது செய்வதை தடுக்க தமிழக , ஆந்திர அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தவறு செய்த ஆந்திர காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.