தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் கரோனா பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் நேற்று 360 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டன. அதேபோல் நேற்று சென்னை மாநகராட்சி சார்பில் பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொண்டாலே, பரிசோதனை செய்து கொண்டவர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், குடும்பத்தார் தனிமைப்படுத்தப்படுவர் என்ற ஒரு அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் பலர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெளியே சென்ற 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் இதுவரை விதிகளை மீறி வெளியே சுற்றியதாக 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டைவிட்டு வெளியே சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். வெளியே செல்பவரோடு தொடர்பில் உள்ளவர்கள் மீதும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.