தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் கூடன்குளம் அருகே இருக்கன்துறை பகுதியில் உள்ள கல் குவாரியில் பாறை சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதில் மூன்று பேர் உள்ளே சிக்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர், வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் விரைந்து மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தினர்.
மொத்தமாக மூன்று பேர் உள்ளே சிக்கியிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், சிக்கியிருந்த மூவரில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் அருள்குமார் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த ஜேசிபி ஓட்டுநர் ராஜேஷ் மீட்கப்பட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மற்றொரு தொழிலாளி ஒருவர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் கனிமவளத்துறை அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.