முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று, கள ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, முதலமைச்சர் இரண்டு நாள் நிகழ்ச்சியாக ஈரோடு மாவட்டத்திற்கு 19ஆம் தேதி செல்லவுள்ளார். இதற்காக நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். அங்கிருந்து 11 மணிக்கு சாலை மார்க்கமாக ஈரோட்டிற்கு மதியம் சுமார் 1 மணியளவில் செல்கிறார். பின்னர், ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.
தொடர்ந்து, ஈரோடு மேட்டுக்கடை தங்கம் மகாலில் நடக்கும் தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையடுத்து மாலை 6 மணிக்கு ஈரோடு பெருந்துறை சாலையில் முத்து மகாலில் நடக்கும் முன்னாள் எம்.எல்.ஏ சந்திரக்குமார் மகள் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். இரவு 7 மணிக்கு நிகழ்ச்சியை நிறைவு செய்து, காலிங்கராயன் மாளிகையில் இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.
இதையடுத்து 20ம் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ஈரோடு அடுத்த சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். விழாவில், மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற வளர்ச்சி திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கிறார். மேலும், சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேரூரையாற்றுகிறார். இதனையொட்டி, அரசு விழா நடக்கும் சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாநகர் முழுக்க சாலையோரம் ஆக்கிரமிப்பு அகற்றம், சாலை சுத்தப்படுத்துதல், சென்டர் மீடியனுக்கு வர்ணம் பூசும் பணிகள், வேகத்தடை அகற்றுதல், குண்டும், குழியுமான சாலையை சீரமைத்தல் போன்ற பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு 8 மாவட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட உள்ளனர். அரசு விழா நடக்கும் மேடை, நிகழ்ச்சி நடக்கும் இடங்கள் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழா, நடக்கும் மேடை, பந்தல் ஆகிய இடங்களில் மோப்ப நாய் மூலமும் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் மூலமும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- முதலமைச்சர் ஈரோடு வருகை தரும் 19ம் தேதி(நாளை) மாவட்டத்தை சேர்ந்த 980 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதவிர கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த பாதுகாப்பு பணிக்கு கோவை மண்டல ஐ.ஜி செந்தில்குமார் தலைமையில், டி.ஐ.ஜி சரவணசுந்தர், ஈரோடு எஸ்.பி. ஜவகர் ஆகியோர் மேற்பார்வையில் 7 மாவட்ட எஸ்.பி.க்கள், ஏ.டி.எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் என ஈரோடு உட்பட 8 மாவட்டத்தை சேர்ந்த 2,480 போலீசார் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.