அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என ஆளுநர்ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தர் நியமனம் செய்வதற்கு தமிழக அரசு சார்பில் தேடுதல் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. இக்குழுவானது 3 நபர்களை பரிந்துரைக்கும். அந்த பரிந்துரையை ஏற்று அதனை ஆளுநருக்கு அனுப்பி, அதில் ஒருவரை ஆளுநர் துணைவேந்தராக நியமிக்க வேண்டும். இது வழக்கமாக நடைமுறையாகும்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவை திரும்பப்பெற வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக தமிழக அரசு தேடுதல் குழுவை அமைத்துள்ளது என குற்றச்சாட்டு தெரிவித்துள்ள ஆளுநர், பல்கலைக்கழகங்களின் மானியக் குழு தலைவர் பரிந்துரைத்த ஒருவரை வேண்டுமென்றே தேடுதல் குழுவில் சேர்க்காதது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என சுட்டிக்காட்டி உள்ளார்.
பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் பரிந்துரைத்தவரை திட்டமிட்டே தமிழக அரசு தேடுதல் குழுவில் சேர்க்க தவிர்த்துள்ளது எனவே தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார்.