நாட்டில், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அதிகளவு புல்டோசர் கலாச்சாரம் நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசம், குஜராத், அசாம், ராஜஸ்தான் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பு வீடுகளை உடனுக்குடன் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. முக்கியமாக, இந்த புல்டோசர் கலாச்சார நடவடிக்கை சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது தான் அதிகளவில் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இது தொடர்பான பல்வேறு வழக்குகள், உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பா.ஜ.க அலுவலகம் ஒன்று அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி புல்டோசரால் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், பாலியா மாவட்டம் பாலியால் நகரில் பா.ஜ.க அலுவலகம் ஒன்று இயங்கி வந்தது. அந்த அலுவலகம், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டின் பேரில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
அந்த ஆய்வில், அந்த அலுவலகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்பது உறுதியானது. இதையடுத்து, நேற்று (17-12-24) அந்த அலுவலகத்திற்கு வந்த அரசு அதிகாரிகள், அந்த இடத்தை புல்டோசர் கொண்டு இடித்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அம்மாவட்ட பா.ஜ.க தலைவர், அந்த இடத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அலுவலகம் இயங்கி வருவதாகவும், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்படவில்லை என்றும் தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.