தமிழகத்தில் நாங்குநேரியில் நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத் தேர்தலில் பணபலம் வெல்லமுடியாது மக்களுக்கான சேவையும் உழைப்பு மட்டுமே வெற்றி பெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.அழகிரி கூறியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மாபெரும் பாதயாத்திரை நடத்தப்பட உள்ளது என்றார்.
மகாத்மா காந்தி அனைவருக்கும் சொந்தமானவர் என்றபோதிலும் யாருக்கு யார் விழா எடுக்க வேண்டும் என்று ஒரு வரைமுறை உள்ளது என்று அவர் கூறினார். தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகளில் செய்ய முடியாத பல காரியங்களை ஒரே மாதத்தில் செய்துள்ளனர். அஞ்சல் துறை மற்றும் ரயில்வே துறை தேர்வை தமிழில் தேர்வு எழுத வேண்டியதில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பை தங்களது இப்போராட்டத்தின் மூலமாக தகர்த்தெறிந்து இன்று தமிழக இளைஞர்கள் தமிழில் தேர்வு எழுதியதன் காரணமாக ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்திய நாடாளுமன்றத்திலேயே தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் தான் மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் பெரும் பெருமிதம் கொண்டார்.
தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெறமுடியாமல் தமிழக அரசு உள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார், தமிழக அரசு செயல்பாடுகளை இழந்து விட்டது. இந்திய நாடு பல்வேறு பொருளாதார சரிவை சந்தித்து கொண்டுள்ளது. பல லட்சம் தொழிலாளர்கள் மோட்டார் வாகன துறையில் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். ஒரு தனியார் பிஸ்கட் தொழிற்சாலை மூடப்பட்டதன் காரணமாக 10 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். கோவையில் முன்னணி உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாகும் என்று கூறிய பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் விவசாய உற்பத்தி இரண்டு சதவீதம் குறைந்துள்ளது. தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு மாறாக கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படும் வகையில் வரியை குறைத்துள்ளது பிறருக்கு எந்தவித லாபமும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றி ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியாக அமையும் என்று கூறினார். தமிழக அரசு தொழிற்சாலைகளுக்கு தேவையான உதவியை செய்யவில்லை என்பதன் காரணமாகவே தமிழகத்தில் செயல்பட்டு வருகின்ற பல்வேறு மோட்டார் வாகனத்துறை இரண்டாவது கட்ட மேம்பாட்டு பணிகளை தமிழகத்தில் தொடங்காமல் பிற மாநிலங்களில் தொடங்க முன் வருகிறது. என்று அவர் குற்றம் சாட்டினார். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இல்லாத தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ள வெளிநாடு செல்லவேண்டும் அதற்கு மாறாக இவர்கள் வெளிநாடு சென்று வருவது மக்களை திசை திருப்பும் முயற்சி ஆகும் என்று அவர் கூறினார். நாங்குநேரி இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை அழைப்போம் என்று அவர் கூறினார்.