கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா ஆய்வு மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில்,
தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின்படி பல்வேறு இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டன. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்யப்பட்டனர். கரூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பொதுமக்களைத் தேடிச் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்று நிறைவேற்றி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தற்போதும் தொடர்கின்றன. இந்தியாவில் கரோனா தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்த உடன் தமிழகத்தில் இலவசமாக விநியோகம் செயயப்படும்.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவலில் எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சி உள்ளது. விவசாயிகளுக்குத் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பதில் மாற்றம் இல்லை. நான் விவசாயி என்று மு.க.ஸ்டாலின் எனக்குச் சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏஜென்டுகளின் நலன்களுக்காக விவசாயிகளை எதிர்க்கட்சியினர் தவறாக வழிநடத்துகின்றனர்.
வேளாண் சட்டம் தொடர்பான 3 சட்டங்களில் தமிழக விவசாயிகளைப் பாதிக்கும் அம்சம் என்ன என்று கூற முடியுமா? வேளாண் சட்டத்தில் உள்ள பாதகமான அம்சங்களைச் சொல்லுமாறு கேட்டால் எதிர்க்கட்சிகளிடம் பதில் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தற்போதும் கூட்டணியில் தொடர்கின்றன. நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டு வந்தோம் என்றார்.