
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூடியது. இந்தக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, துறை செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
அமைச்சரவைக் கூட்டத்தில் புதியதாகத் தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கான முன்னேற்பாட்டுச் செயல்பாடுகள், கலைஞர் நூற்றாண்டு விழாவில் புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர். மேலும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதற்குக் கண்டனம் தெரிவித்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற சட்டப் பேரவையைக் கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இது குறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தமிழக அரசு சார்பில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் ஆதரவற்றோர்களுக்கான உதவித்தொகை ஆகியவை தற்போது மாதந்தோறும் 1000 ரூபாயாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையில் இருந்து 200 ரூபாய் உயர்த்தப்பட்டு 1200 ரூபாயாக வழங்குவதற்கான அறிவிப்பு அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முலம் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 30 லட்சம் பயனாளிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.