![Case related to idol placement in public places; Tamil Nadu responds to High Court](http://image.nakkheeran.in/cdn/farfuture/boDDgloADkjr9jaZHpUbMkgnwom3pwpRc-UVY7GsVu8/1642845798/sites/default/files/inline-images/th_1652.jpg)
சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கோவை அவினாசி சாலை சந்திப்பில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலையின் பீடத்தை அகலப்படுத்தி, அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர்களின் சிலைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள், பிறப்பித்த அறிவிப்புகள் குறித்து விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் பொது இடங்களில் சிலைகள் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழகச் தலைமைச் செயலாளர் இறையன்பு தாக்கல் செய்த பதில் மனுவில், “உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிலைகள் அமைக்க அனுமதி கோரி அளிக்கும் விண்ணப்பங்களைப் பல்வேறு துறைகளின் ஆய்வுக்கு உட்படுத்தி, முதலமைச்சரின் உத்தரவைப் பெற்று வருவாய்த் துறை இறுதி உத்தரவைப் பிறப்பிக்கும் வகையில் கடந்த 2017-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணையின் அடிப்படையில், வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசு நிலங்கள், நீர்நிலைகள், சாலைகள், புராதனச் சின்னங்கள் அமைந்துள்ள இடங்கள் ஆக்கிரமிக்கப்படாமல் சிலைகள் அமைக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிலைகள் அமைக்கப்படுவதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமா என்பது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அறிக்கை பெற வேண்டும். பட்டா நிலங்களில் அமைக்கப்படும் சிலைகளைப் பராமரிப்பதற்கான செலவை, சிலை அமைப்பவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்ட ஒழுங்கு பிரச்சனை, உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி, நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவைக் கருத்தில் கொண்டே சிலைகள் அமைக்க அனுமதியளிக்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணாக தமிழகத்தில் பொது இடங்களில் சிலைகள் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை” என்று அதில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.