சேலத்தில் போலி காசோலை தயாரித்து வங்கியில் இருந்து பணம் எடுக்க முயன்ற இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள சிமெண்ட் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருபவர் சதீஸ்குமார். இவர் செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், ''எங்கள் வாடிக்கையாளர் ஒருவர் எங்களிடம் வாங்கிய சரக்குக்கு உண்டான 9,337 ரூபாயை காசோலையாக எழுதிக் கொடுத்தார். அதை நாங்கள் தனியார் வங்கியில் செலுத்தி உரிய தொகையைப் பெற்றுக்கொண்டோம். ஆனால் அதே காசோலை எண்ணை பயன்படுத்தி வங்கியில் மீண்டும் வேறு ஒரு நபர் பணம் எடுக்க முயன்றார். இதுகுறித்து வங்கி ஊழியர்கள் எங்களுக்கு தகவல் அளித்தனர். மோசடி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கூறியிருந்தனர்.
இதையடுத்து, காவல்துறையினர் சம்பந்தப்பட்ட வங்கியில் நேரில் சென்று விசாரணை நடத்தினர். செவ்வாய்பேட்டை தேவாங்கபுரத்தை சேர்ந்த தேவி என்ற பெண்ணின் வங்கி கணக்குக்கு பணத்தை செலுத்துமாறு அந்த காசோலை வங்கிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்தப் பெண்ணிடம் விசாரிப்பதற்காக வீட்டை தேடிச்சென்றனர். வீட்டில் தேவியின் கணவர் மணிகண்டன் மட்டும் இருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. களரம்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான மற்றொரு மணிகண்டன் மற்றும் அவரின் நண்பரான எருமாபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஆகியோர் தேவியின் கணவரான மணிகண்டனிடம் காசோலையை கொடுத்துள்ளனர்.
அப்போது அவர்கள், ''நாங்கள் அதிகளவில் காசோலை மூலம் பணம் பரிமாற்றம் செய்வதால் எங்களுக்கு அதிகளவில் ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்யப்படுகிறது. ஆகவே, நாங்கள் கொடுக்கும் காசோலையை மாற்றிக் கொடுக்க வேண்டும்,'' என்று தேவியின் கணவரிடம் கூறி காசோலையைக் கொடுத்துள்ளனர். இதற்காக அவருக்கு 2 ஆயிரம் ரூபாய் கமிஷன் தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர். அதையடுத்துதான் அந்த காசோலையை வங்கிக் கணக்கில் செலுத்தி பணத்தை எடுக்க முயன்றிருப்பது தெரிய வந்துள்ளது.
களரம்பட்டி மணிகண்டனிடம் விசாரித்தபோது, வங்கிக்கு அனுப்பப்பட்ட சர்ச்சைக்குரிய அந்த காசோலையை பெங்களூருவில் இருந்து ஒருவர் தனக்கு அனுப்பி வைத்ததாக முன்னுக்குப்பின் முரணாக கூறினார். பின்னர், அந்த காசோலையை போலியாக தயாரித்ததாகக் கூறினார்.
இதையடுத்து பிரகாஷ் மற்றும் களரம்பட்டி மணிகண்டன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். போலி காசோலை குற்றச்செயலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.