சென்னையில் 15 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை ஆந்திரா மாநிலத்தில், தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அயனாவரத்தில் தன் தாயுடன் வசித்து வந்த 15 வயது சிறுமி அவ்வப்போது தாயுடனும் சண்டை போட்டுக்கொண்டு தன் பாட்டியுடன் வசித்து வருவதும், அதேபோல அங்கு சண்டையிட்டு தாய் வீட்டுக்கு செல்வதும் வழக்கமாக இருந்துள்ளது. இந்தநிலையில் மார்ச் மாதம் 20ஆம் தேதி பாட்டியுடனான சண்டை முற்றவே, வீட்டை விட்டு வெளியேறினார். ஏற்கனவே தாயுடன் சண்டை போட்டுக்கொண்டு தன் பாட்டி வீட்டிற்கு சென்ற நிலையில், தற்போது எங்கு போவது எனத் தெரியாமல் பெரம்பூர் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த சிறுமிக்கு அடைக்கலம் கொடுப்பது போல நைசாக பேச்சு கொடுத்துள்ளார் திருத்தணியைச் சேர்ந்த வெங்கடேசன்.
அவரது பேச்சை நம்பிய அந்த சிறுமி, அவருடன் சென்றிருக்கிறார். திருத்தணிக்கு அழைத்து சென்ற வெங்கடேசன் வீட்டில் சிறுமியைத் தனி அறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதே போல மூன்றுமாதமாக தொல்லை கொடுத்துள்ள நிலையில், வெங்கடேசன் தனது தச்சு வேலை விஷயமாக ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டா சென்றதால் வெங்கடேசனின் தாயார் சிறுமியைக் காப்பாற்றும் நோக்கில் அவரை வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறார். இதையடுத்து திருத்தணி ரயில் நிலையத்தில் சிறுமி சுற்றி திரிவதை கண்ட ரயில்வே போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது தனக்கு நேர்ந்த கொடுமைகளை எல்லாம் சிறுமி கூறவே அதிர்ந்து போன ரயில்வே போலீசார், அயனாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். மீட்கப்பட்ட சிறுமி அவரது பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனிடையே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை தந்த வெங்கடேசன் ஆந்திராவிற்கு சென்ற நிலையில் அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற புலனாய்வு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில், தலைமை செயலக காவல் ஆய்வாளர் தேவிகா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் திருத்தணி சென்ற தனிப்படை போலீசார் அங்கு வீடு பூட்டி இருந்ததால் அக்கம் பக்கத்தினர் கூறிய தகவலின் அடிப்படையில் திருப்பதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.
அங்கும் வெங்கடேசன் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த போலீசார் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டா சென்றனர். ரேணிகுண்டாவில் உள்ள அண்ணன் வீட்டில் இருந்து வெங்கடேசன் தச்சு வேலைக்காக சென்று இருப்பதை அறிந்து கொண்டு சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக அந்த இடத்தில் காத்திருந்து பணி முடித்து இரவு 8 மணி அளவில் வீடு திரும்பிய அவரை சுற்றி வளைத்து கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
வெங்கடேசனிடம் நடத்திய விசாரணையில் தச்சு வேலைக்காரணமாக சென்னை பெரம்பூர் வந்ததாகவும், பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனை அருகே நின்று இருந்த சிறுமியை விசாரித்த பொழுது, வீட்டில் சண்டையிட்டு எங்கே செல்வது எனத் தெரியாமல் இருப்பதாக கூறியதை கேட்டு அவருக்கு உணவு, திண்பண்டங்கள் வாங்கி கொடுத்து பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து திருத்தணி அழைத்து சென்று மூன்று மாதங்களாக பாலியல் வன்புணர்வு செய்ததையும் கூறினார்.
இந்த நிலையில் போலீசார் அவர் மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
இன்னும் இரண்டு மாதங்களில் உறவுகார பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்ய உள்ள நிலையில், பாலியல் வழக்கில் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.