சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். அதேநேரம் தேர்தலின்போது அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையிலும், ஜனநாயக கடமையாற்ற மக்கள் முன்வர வேண்டும் என்பதனை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் தேர்தல் ஆணையத்தின் மூலம் நடைபெற்று வருகிறது.
அதன்படி திருச்சி மாவட்டத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்தும் நோக்கில் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தவும், அனைவரும் தவறாது ஜனநாயக கடமையாற்ற முன்வர வேண்டும். இதனை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆவின் பால் பொருட்களில் தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தும் வாசகங்கள் அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் நிகழ்வினை மாவட்ட தேர்தல் அதிகாரி சிவராசு இன்று (13.03.2021) தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சிவராசு, “கடந்த பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் 72 முதல் 76 சதவீதமாக இருந்தது. பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில் ஜனநாயக கடமையான வாக்களிப்பதை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்றாலும் கிராமப்புறங்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் படித்தவர்கள் மத்தியில் வாக்களிப்பது குறைவாகவே உள்ளது. சதவீதமும் குறைவாகவே உள்ளது. இதனை மேம்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் மூலம் நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஒருபகுதியாக ஆவின் பால் பொருட்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.” என்றார்.