முன்னாள் அமைச்சர் வீரமணி வீடு மற்றும் அவருடன் சம்மந்தப்பட்ட உறவினர்கள், பினாமிகள் என 35க்கும் மேற்பட்ட இடங்களில் செப்டம்பர் 16 ஆம் தேதி காலை ரெய்டு நடந்தது. இந்த ரெய்டு குறித்த செய்திகள் வெளியானதும் அதிமுகவில் உள்ள வீரமணியின் ஆதரவாளர்கள் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்தனர். அதேநேரத்தில் அங்கு வந்த வாணியம்பாடி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான சம்பத்குமார் தலைமையிலான அதிமுகவினர் காவல்துறைக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதனையெல்லாம் செய்தியாகப் பதிவு செய்துக்கொண்டுயிருந்த தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் கணேஷ்குமார் என்பவர் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். காவல்துறை தலையிட்டு செய்தியாளரின் உயிரைக் காப்பாற்றியது. முன்னாள் எம்.எல்.ஏ-வான சம்பத்குமார் நாக்கை கடித்து செய்தியாளரை மிரட்டினார். மேலும் கேமராக்களும் அடித்து உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் காவல்துறையில் புகார் செய்திருந்தனர். இந்நிலையில், செய்தியாளரைத் தாக்கியதாக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.