Skip to main content

தீவுத்திடலில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு!

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
Arrangements to pay tribute to Vijayakanth's body in the island

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்த்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். பின்னர் அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த சூழலில் கோயம்பேட்டில் சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, விஜயகாந்தின் உடல் இடமாற்றம் செய்வது குறித்து குடும்பத்தினர் முடிவு செய்வர் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாகச் சென்னை தீவுத் திடலில் அவரது உடல் வைக்கப்பட உள்ளது. நாளை (29.12.2023) அதிகாலை 6 மணிக்கு தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் மாற்றப்படும் என தேமுதிக சார்வில் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் மதியம் 1 மணியளவில் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு செல்கிறது.

இது குறித்து தேமுதிக தலைமைக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் இன்று (28-12-2023) காலை 6.10 மணியளவில் மறைவு என்ற செய்தி தேமுதிகவினருக்கும், திரையுலகிற்கும், உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும். விஜயகாந்த்தின் உடல் தீவுத்திடலில் அஞ்சலி செலுத்தும் வகையில், பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் அரசியல் பிரமுகர்கள் திரையுலக பிரபலங்கள் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் நாளை (29.12 2023) வெள்ளிக்கிழமை காலை 06.00 மணியிலிருந்து மதியம் 01.00 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலிலிருந்து மதியம் 01.00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமைக் கழக அலுவலகம் அடைந்து, இறுதிச் சடங்கானது மாலை 04.45 மணியளவில் தேமுதிக தலைமைக் கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்