சேலத்தில் குண்டர்கள் துணையுடன், கதவுகளை பூட்டிக்கொண்டு அதிமுகவினர் கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்தியதால் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் நகர கூட்டுறவு வங்கி 111 ஆண்டுகள் பழமையானது. 90 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். தொடர்ந்து லாபகரமாக இயங்கி வருவதால் கூட்டுறவு தேர்தலின்போது இந்த வங்கியைக் கைப்பற்றுவதில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளிடையே எப்போதும் கடும் போட்டி இருக்கும்.
நான்காம் கட்டத் தேர்தலையொட்டி, இன்று சேலம் நகர கூட்டுறவு வங்கியில் வேட்புமனு தாக்கல் நடந்தது. இதையொட்டி, அதிமுகவினர் இன்று காலை 6 மணிக்கே வங்கியின் உள்ளே சென்று கதவுகளை பூட்டிக்கொண்டனர்.
காலை 9.30 மணிக்கு, வேட்புமனு தாக்கல் செய்வதற்காக திமுக மத்திய மாவட்ட பொருளாளர் ஜி.கே.சுபாஷ் தலைமையில் திமுகவினர் வந்தனர். அவர்களுக்கு வேட்புமனு படிவம் வழங்கப்படாததோடு, வங்கியின் உள்ளே நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டது. காவல்துறையினரும் அதிமுகவினரோடு கைகோத்துக்கொண்டு திமுகவினரை உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.
மேலும், வங்கிக்கு சம்பந்தமே இல்லாமல் உறுப்பினர்கள் போர்வையில் குண்டர்களையும் ஆளுங்கட்சியினர் வரவழைத்திருந்தனர். அவர்கள் அனைவரும் வங்கிக்கு அருகில் உள்ள குறுகலான தெருக்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அதிமுகவினரின் அராஜகத்தைக் கண்டித்து, திமுகவினர் திடீரென்று சேலம் நகர கூட்டுறவு வங்கி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். ஜி.கே.சுபாஷ், தரையில் படுத்துக்கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து முழக்கமிட்டார்.
எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு பதிவாளர் ஆகியோரை கண்டித்து எழுதப்பட்ட தட்டிகளை கொண்டு வந்திருந்தனர். இதைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டதாக ஜி.கே.சுபாஷ், திமுக நிர்வாகிகள் கேபிள் சரவணன், சாந்தமூர்த்தி, கணேசன், கேபிள் ராஜா, சிவாஜி, தேவிபாலா உள்ளிட்ட 35 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5 பேர் பெண்கள்.
உதவி போலீஸ் கமிஷனர் அன்பு, டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். சாலை மறியலால் சேலம் அக்ரஹாரம் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல் சேலம் அம்மாபேட்டை நகர கூட்டுறவு வங்கியிலும் அதிமுகவினர் வங்கியின் கதவுகளை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற திமுகவினரை தடுத்தனர். போலீசாரும் அவர்கள் உள்ளே செல்லாத வகையில் அரண் அமைத்து தடுத்து நிறுத்தினர்.
அம்மாபேட்டை திமுக பகுதி செயலாளர் தனசேகரன், முன்னாள் கவுன்சிலர் தாஜுதீன், நிர்வாகிகள் பிரபாகர், மனோகரன், வக்கீல் மஞ்சுளா, முருகன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் வங்கியின் முன்பு திரண்டு வந்து அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
அப்போது அவர்கள், 'எடப்பாடி அரசே எடுபிடி அரசே', 'ஓடிவிடு ஓடிவிடு நாட்டைவிட்டு ஓடிவிடு' என்று முழக்கங்களை எழுப்பினர்.
நான்காம் கட்டமாக இன்று வேட்புமனு தாக்கல் நடக்கும் பல கூட்டுறவு சங்கங்களிலும் குண்டர்கள், போலீசார் துணையுடன் அதிமுகவினர் உச்சக்கட்ட அராஜகத்தில் ஈடுபட்டனர்.