தஞ்சை அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மாணவி பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த வீடியோ எடுக்கப்பட்ட மொபைல் ஃபோன் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பள்ளி நிர்வாகம் மாணவியை மதம் மாறும்படி கட்டாயப்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டார் என சிறுமியின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் சிறுமியின் பெற்றோர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவியின் உடலைப் பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. தஞ்சை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக மாணவியின் பெற்றோர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்றும், அதனை சீல் செய்த உறையில் வைத்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை, தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர்கள் தஞ்சை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களுடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவர் பேசுவது தொடர்பான வீடியோ வெளியாகி இருந்தது. அது உண்மையா என்பதைக் கண்டறிய தடயவியல் சோதனை நடத்தப்பட வேண்டும் எனவே அந்த வீடியோவை பதிவு செய்த முத்துவேல் என்பவர் ஆஜராகி சம்பந்தப்பட்ட செல்ஃபோனை காவல்துறை முன் ஆஜராகி வழங்கிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் வல்லம் டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி பிருந்தா முன்னிலையில் வீடியோ எடுத்த முத்துவேலுவும் சிறுமியின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடம் இது குறித்து சுமார் ஒரு மணிநேரம் விசாரணை நடைபெற்றது. பின்னர் மாணவி பேசியதாக பதிவு செய்யப்பட்ட வீடியோ அடங்கிய செல்ஃபோன் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.