கர்நாடக சட்டப்பேரவையில் மழை தொடர்பாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் பேச வேண்டும் என்று கோஷம் போட்டனர். அப்போது சபாநாயகர் அனைவரையும் அமரும்படி கேட்டுக்கொண்டார். இருந்தும் விடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூடுதல் நேரம் வேண்டும் என்று தொடர்ந்து கூச்சலிட்டு வந்தனர். இதனால் பொறுமையிழந்த சபாநாயகர், "அனைவரும் மகிழ்ச்சி அடையுங்கள், அனைத்திற்கும் ஆமாம் போடும் நிலைக்குத் தற்போது நான் வந்துவிட்டேன், நீங்கள் தொடர்ந்து கூச்சலிடுங்கள்" என்று கோவமாக கூறினார்.
இதைக் கேட்ட முன்னாள் சபாநாயகரும், தற்போதைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஆர்.ரமேஷ்குமார், "பாலியல் வன்கொடுமையைத் தவிர்க்க முடியாதபோது அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பழமொழி ஒன்று உள்ளது. அதுபோலத்தான் உங்கள் நிலைமையும் உள்ளது" என்றார். இதுவாவது பரவாயில்லை, கே.ஆர்.ரமேஷ்குமாரை தூக்கிச் சாப்பிடும் விதமாத சபாநாயர், "இது உங்களின் சொந்த அனுபவம் போல்" எனக் கூறி அவைக்கு மேலும் அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி எம்.பி. தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மக்கள் பிரதிநிதிகள் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து, இவ்வளவு மோசமாக பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கர்நாடக சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகரின் பாலியல் வன்கொடுமை குறித்த பேச்சு, அதைக் கேட்டு இன்றைய சபாநாயகர் சிரிப்பது இரண்டும் கடுமையான கண்டனத்திற்குரியது.
காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை யார் சொன்னாலும் கண்டித்தே வந்திருக்கிறது. இப்பொழுதும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் பாலியல் வன்கொடுமை தொடர்பான கருத்தைக் கண்டித்திருப்பதை வரவேற்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ரமேஷ் குமார் இன்றைய (17/12/2021) சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.