மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து நேற்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உரிமைத் தொகை திட்டம் குறித்துப் பேசியிருந்தார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது' எனத் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பது எப்படி? யார் யாருக்கு இந்த உரிமைத் தொகை கொடுக்கப்படும் என்பது தொடர்பான தகவல்கள் நேற்று வெளியாகியது. அதில், குடும்ப அட்டை உள்ளவர்கள் ரேஷன் கடைகளில் நடைபெறும் முகாமில் 21 வயது நிரம்பிய பெண்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர். அந்த குடும்ப அட்டையில் ஒருவர் குடும்பத் தலைவியாக எடுத்துக்கொள்ளப்பட்டு கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தகுதி விவரங்களைத் தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
இந்நிலையில் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' தொடர்பான விண்ணப்பப் படிவத்தைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்தப் படிவத்தில் பல்வேறு கேள்விகள் இடம் பெற்றுள்ளன. 18 வயதுக்கு மேல் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் சரிபார்க்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடும்ப அட்டை எண், வாடகை வீடா, ஆதார் எண் உள்ளிட்ட 13 கேள்விகள் இடம் பெற்றுள்ளன. சொத்து விவரங்கள், வாகனம் உள்ளிட்ட விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். மின் இணைப்பு எண், திருமண நிலை, தொலைப்பேசி எண் உள்ளிட்ட கேள்விகளும் இடம் பெற்றுள்ளன. வங்கிக் கணக்கு எண், வங்கிக் கிளையின் பெயர், வங்கியின் பெயர் குறித்த கேள்விகளும் இடம் பெற்றுள்ளது.