தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான சிபிஐ விசாரணை அறிக்கையை செப்டம்பர் 15 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 27)சிபிஐக்கு உத்தரவிட்டிருக்கிறது.
நேற்று (ஜூன் 26) நாடாளுமன்றத்தில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினரான கனிமொழி, “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்து ஒருவருடத்துக்கு மேல் ஆகியும், மதுரை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு 10 மாதங்கள் ஆகியும் சிபிஐ ஒரே ஒரு காவலரின் பெயர் கூட எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்படவில்லை. சிபிஐ விசாரணையின் நிலை இப்படி இருந்தால், தூத்துக்குடி மக்களுக்கு எவ்வாறு நீதி கிடைப்பது உறுதிப்படுத்தப்படும்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
நேற்று நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. எழுப்பிய கேள்விக்கு இன்று மதுரை உயர் நீதிமன்றமே உரிய பதிலை அளித்திருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், சிபிஐ தரப்பில், ‘இந்தவழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தவற்கான கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட வேண்டும்” என்று சிபிஐ சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் இன்னும் பலரையும் விசாரிக்க வேண்டியிருப்பதால் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் சிபிஐ மேற்கொண்ட விசாரணையின் இதுவரையிலான நிலை குறித்து, செப்டம்பர் 15 ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்கள் நீதிபதிகள்.
மக்கள் மன்றத்துக்காக கனிமொழி எம்பி. நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு நீதிமன்றம் உரிய பதில் அளித்துள்ளது.