
வேலூர் மாவட்டம் திமிரி அடுத்த ஒழலை கிராமத்தை சேர்ந்தவர் ராதா. இவரது மகள் சங்கீதா(17). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் +1 படித்து வந்தார் சங்கீதா. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது தாய் ராதா இறந்து விட்டதால், தனது தந்தை டீக்காராமனுடன் தாழனூரில் வசித்து வந்தார் சங்கீதா. பள்ளிக்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளதால், வீட்டில் இருந்தார். இந்நிலையில் தனது வங்கி புத்தக நகலை பள்ளியில் சமர்ப்பிக்க சங்கீதா நேற்று 16ந்தேதி மதியம் ஒழலை வந்துள்ளார்.
மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது அண்ணன் நவீன் நேற்றிரவு முழுவதும் பல இடங்களில் தேடியுள்ளார். இந்த நிலையில் இன்று 17ந்தேதி காலை ஒழலையில் உள்ள ராதாவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு சங்கீதா கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து திமிரி காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் பகலவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து மோப்ப நாய் சன்னி சம்பவ இடத்துக்கு வரவைக்கப்பட்டது.
சங்கீதாவின் கழுத்தை டயர் டியூப்பை கொண்டு இருக்கி கொலை செய்துள்ளது முதல் கட்டமாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.