ஆட்சியாளர்களுக்கு ஏற்ப லஞ்ச ஒழிப்புத்துறை மாறுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் கடும் விமர்சனத்தை தெரிவித்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதிமுக ஆட்சி வந்த பிறகு அந்த வழக்கிலிருந்து அவரை விடுவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து மறு ஆய்வு நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கில், 'லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்பான வழக்குகளில் ஆட்சியாளர்கள் யார் இருக்கிறார்கள் என்பதை பொறுத்து அவர்களுக்கு ஏற்ப பச்சோந்தி போல லஞ்ச ஒழிப்புத்துறை மாறிக்கொண்டிருக்கிறது' என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார். 'லஞ்ச ஒழிப்புத்துறை யாருக்கும் சாதகமானதாக இல்லாமல் நடுநிலையாக செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் மட்டும்தான் லஞ்ச ஒழிப்புத்துறை உருவாக்கியதற்கான நோக்கமும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதற்கான நோக்கமும் நிறைவேறும்.
எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறையாக இருந்தாலும் சரி, லஞ்ச ஒழிப்புத் துறையாக இருந்தாலும் சரி ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் நிலை எடுக்கப்பட்டால் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு சட்டம் பொருந்தாது என்று அறிவித்துவிட்டு போய்விடலாம். எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அவர்களுக்கு ஆதரவாக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறது. இதனால் ஓபிஎஸ் விடுவிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்வதில் எந்தவித தவறும் இல்லை' என்றார்.
பன்னீர் செல்வத்தின் சொத்து மதிப்பு 374 சதவிகிதம் உயர்ந்துள்ளது. நான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான வழக்குகளில் இதுவும் ஒன்று. சிறப்பு நீதிமன்றம் அளித்த அத்தனை உத்தரவுகளையும் ஆராயத் தயாராக இருக்கிறோம். அதன் அடிப்படையில் ஓ.பன்னீர் செல்வத்தின் மீதான வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை, பன்னீர்செல்வம், அவருடைய மகன் ரவீந்திரநாத் குமார், சகோதரர்கள் ஓ.ராஜா, பாலமுருகன், அவரவர்களுடைய மனைவிகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 27 ஆம் தேதி ஒத்திவைத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.