தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று (மார்ச் 13 ஆம் தேதி) காலை தொடங்கியது. அதேபோல் இன்று (மார்ச் 14 ஆம் தேதி) காலை பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2022 - 2023 கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்புத் தேர்வினை 8.5 லட்சம் மாணவர்களும், அதே போல 11 ஆம் வகுப்புத் தேர்வினை 7.8 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளனர். 3,225 மையங்களில் இந்த பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் இந்த தேர்வுப் பணிகளிலும் விடைத்தாள் திருத்தும் பணிகளிலும் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழித்தேர்வை 50,674 பேர் எழுதவில்லை எனப் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் முதல் தாள் தேர்வை பள்ளி மாணவர்கள் 49,559 பேரும், தனித்தேர்வர்கள் 1,115 பேரும் தேர்வு எழுத வரவில்லை எனப் பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் முதல் தாள் தேர்விற்குப் பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் பதிவு செய்திருந்தனர். இதில் 8,01,744 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 49 ஆயிரத்து 559 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதேபோல் தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 901 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 7 ஆயிரத்து 786 பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். 1,115 பேர் தேர்வு எழுத வரவில்லை.’ என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டிவிட்டரில், "தமிழ்நாட்டில் நேற்று தொடங்கிய 12-ஆம் வகுப்புத் தேர்வுகளில் தமிழ் மொழிப்பாடத் தாளை 50,674 மாணவர்கள் எழுதவில்லை என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மொத்த மாணவர்களில் சுமார் 7% மாணவர்கள் தேர்வை எழுதாதது இதுவே முதல் முறை. இது அதிர்ச்சியளிக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதாதது, தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்படாதது போன்றவற்றால் ஏற்பட்ட அச்சம் ஆகியவை தான் பெரும்பான்மையான 12-ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் தேர்வையே எழுதாததற்குக் காரணம் என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அச்சம் காரணமாக அடுத்து வரும் தேர்வுகளையும் இந்த மாணவர்கள் எழுதாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அது அவர்களின் எதிர்காலத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால் இந்தப் போக்கிற்கு முடிவு கட்ட தமிழக அரசின் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ் மொழிப்பாடத் தேர்வை எழுதாத மாணவர்களின் பட்டியலை வட்ட அளவில் தயாரித்து, அந்த மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு வழங்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் அடுத்து வரும் தேர்வுகளைத் தவறாமல் எழுதுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.