Skip to main content

“மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 16/09/2024 | Edited on 16/09/2024
 Anbumani Ramadoss asserted on Action should be taken to completely prevent sand robbery

மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சன்னாசி நல்லூர் -அங்கனூர் சாலையில் மணல் கடத்திச் சென்ற சரக்குந்தை  அப்பகுதியைச் சேர்ந்த காவலர் தமிழ்ச்செல்வனும், ஊர்க் காவல் படை வீரர் வெங்கடேசனும் தடுக்க முயன்ற போது, அவர்கள் மீது மோதி விட்டு மணல் கடத்தல் சரக்குந்து தப்பிச் சென்றுள்ளது. இதில் காவலர் தமிழ்ச்செல்வன் கைமுறிந்த நிலையிலும், ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் காயமடைந்த நிலையிலும், மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர். காவலர்களை கொல்ல முயன்ற மணல் கடத்தல் கும்பலின் செயல் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு முழுவதும் மணல் கடத்தலைத் தடுக்க முயலும் அதிகாரிகள்  தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ்  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். அதற்குப் பிந்தைய ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 100 இடங்களிலாவது மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவற்றைத் தடுக்க அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மணல் கடத்தல் என்பது சட்ட விரோத செயல்; அதில் ஈடுபட்டால் தண்டனை கிடைக்கும் என்ற அச்சம் ஏற்பட்டாலே மணல் கடத்தல் குறைந்து விடும். ஆனால், தமிழ்நாட்டில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு சட்டத்தின் மீது எந்த அச்சமும் இல்லை. அவர்களைக் கண்டு அதிகாரிகள் தான் அஞ்ச வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு மணல் கடத்தல் கும்பல்களுக்கு செல்வாக்கு உள்ளது. அதனால் தான் தமிழ்நாட்டில்  நடப்பது மக்களாட்சியா? மணல் கடத்தல் கும்பல் ஆட்சியா? என்ற ஐயம் எழுகிறது.

அரியலூர் மாவட்டத்தில் காவலர்களை கொலை செய்ய முயற்சி நடந்து 24 மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. நெருக்கடிகள் அதிகரித்தால் அப்பாவிகள் சிலரை கைது செய்து வழக்குக்கு முடிவு கட்டுவதையே காவல்துறை வாடிக்கையாக வைத்துள்ளது. இந்த நிலையை மாற்றி மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். காவலர்களை கொல்ல முயன்ற மணல் கடத்தல் கும்பலை உடனடியாக  கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்