
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டார். அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் உடல் நலம் தேறி வர வேண்டும் எனத் திரைப் பிரபலங்கள் மட்டுமல்லாது ரசிகர்கள், அரசியல் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் முதல் முறையாக கலந்துகொண்டார். அவருடன் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைப்படி கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேமுதிக பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேமலதா விஜயகாந்திற்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், சென்னையில் இன்று நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.