தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் பிரச்சாரம், கூட்டணி என பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் (26/2/2021) சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், வாக்கெடுப்பு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைமுறைகளும் அமலுக்கு வந்தது. தற்பொழுது அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
நேற்று தமிழகம் வந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில் இன்று விழுப்புரம் காரைக்காலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். காரைக்கால் மற்றும் விழுப்புரத்தில் இன்று நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 9 மணிக்கு காரைக்கால் செல்லும் அமித்ஷா 10:30 மணிக்கு காரைக்காலில் புதுச்சேரி மாநில பாஜக நிர்வாகிகளிடம் கலந்துரையாடுகிறார். அதனையடுத்து 11.30 மணிக்கு காரைக்காலில் நடக்கும் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பரப்புரை மேற்கொள்கிறார். பிற்பகல் 1 மணிக்கு புதுச்சேரி மாநில பாஜக உயர்மட்டக்குழு கூட்டத்தில் கலந்துரையாடுகிறார். அதேபோல் விழுப்புரத்தில் மாலை 3.45 மணிக்கு பாஜக கூட்டத்தில் நிர்வாகிகளுடன் கலந்துரையாட இருக்கும் அமித்ஷா, விழுப்புரம் ஜானகிபுரத்தில் மாலை 5 மணிக்கு பாஜக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேச இருக்கிறார். தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு பின்பு இரவு 7 மணிக்கு பாஜக மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.