கொளத்தூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 5.06 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக, சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. மேலும், வியாழக்கிழமை (அக். 10) இந்த அலுவலகம் மூலம் பொது நிதியில் இருந்து 1.20 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்படுவதாகவும், அதன்பேரில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெரும் தொகை கமிஷனாக கைம்மாற இருப்பதாகவும் காவல்துறைக்குச் சொல்லப்பட்டு உள்ளது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, கோமதி, ரவிச்சந்திரன், உதவி ஆய்வாளர் ஒருவர் மற்றும் 8 காவலர்கள் கொண்ட குழுவினர், கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று காலை முதல் சாதாரண உடையில் ரகசியமாக நோட்டம் விட்டுள்ளனர். மாலை 5.30 மணியளவில், இதுதான் தக்க தருணம் என்பதை உணர்ந்த லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர், அதிரடியாக அந்த அலுவலகத்திற்குள் புகுந்தனர்.
திடீரென்று லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நுழைந்து விட்டதால் அலுவலக ஊழியர்கள், இடைத்தரகர்கள், ஒப்பந்ததாரர்கள் கலக்கமும், பதற்றமும் அடைந்தனர். அலுவலக வாயில் கதவுகளை அடைத்த லஞ்ச ஒழிப்பு துறையினர், உள்ளே இருக்கும் யாரும் வெளியே செல்லக்கூடாது என்றும், அவரவர் அந்தந்த இடத்திலேயே இருக்கையில் அமரும்படி கறாராக கூறினர். இதனால், லஞ்சப்பேர் வழிகள் செய்வதறியாமல் விழிபிதுங்கி நின்றனர். அனைவருடைய செல்போன்களையும் உடனடியாக அணைத்து வைக்கும்படி உத்தரவிட்டனர்.
இதன்பிறகு, அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு மேசை டிராயர்கள், பீரோக்களிலும் தீவிர சோதனை நடத்தினர். கோப்புகளிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையில், கணக்கில் வராத மொத்தம் 5.06 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. சோதனை நடந்தபோது, கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ராமச்சந்திரன், ஓவர்சீயர் ஒருவர் மற்றும் தேவராஜன் என்ற டெக்னிகல் அசிஸ்டன்ட் ஒருவரும் இருந்துள்ளனர். பொறியாளர், ஓவர்சீயர் ஆகியோரிடம் இருந்து பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஆனால் டெக்னிகல் அசிஸ்டன்ட் தேவராஜனிடம் இருந்தே மொத்தப்பணமும் கைப்பற்றப்பட்டு உள்ளது. ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 5 முதல் 10 சதவீதம் வரை அலுவலக ஊழியர்கள் கமிஷன் பெற்றுள்ளது, முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தப்பணம் எப்படி வந்தது? அலுவலகம் தொடர்புடையது என்றால் அதற்கான ரசீதுகள் இருக்கின்றனவா? அதிகாரிகள், அரசியல் புள்ளிகளுக்கு இதில் பங்கிருக்கிறதா? என பல்வேறு வினாக்களால் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் அலுவலக ஊழியர்களை திணறடித்தனர். நேற்று (10/10/2019) மாலை 5.30 மணிக்கு தொடங்கிய சோதனை மற்றும் விசாரணை இன்று (அக். 11) அதிகாலை 4 மணிக்கு முடிந்தது. விடிய விடிய நடந்த லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் சோதனையால், தீபாவளியைக் குறிவைத்து வசூலில் திளைக்கும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.