Skip to main content

எருது விடும் விழா; லஞ்சம் கேட்ட தீயணைப்புத் துறையினரின் வீடியோ வைரல்   

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

ambur fire rescue department officer viral video 

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான எருது விடும் விழா பல்வேறு பகுதியில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவிற்கு தடையில்லா சான்றிதழ் தீயணைப்புத் துறையினர் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.

 

இந்நிலையில் ஆம்பூர் அடுத்து புது கோவிந்தபுரம் பகுதியில் எருது விடும் விழா நடத்த தடையில்லாச் சான்றிதழ் கேட்டு, விழாக் குழுவினர் தீயணைப்புத் துறையினரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அதனைப் பெற்றுக் கொண்ட தீயணைப்புத் துறையினர் 3000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதாக அலுவலர் தெரிவித்துள்ளார். திருவிழா முடிந்தவுடன் அதற்கான பணத்தை கொடுப்பதாக விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர் அதற்கு மறுப்பு தெரிவித்த தீயணைப்புத்துறை அலுவலர் மேகநாதன் சான்றிதழ் வழங்க மறுத்துள்ளார்.

 

ஆம்பூர் தீயணைப்புத்துறை அலுவலர் மேகநாதன் ரூபாய் 3 ஆயிரம் ரூபாயை கொடுத்தால் மட்டுமே தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர், அவர் லஞ்சம் கேட்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் எருது விடும் விழா நடத்துவதற்கு அரசு அலுவலர்கள் மட்டும் சுமார் 50,000 முதல் 1 லட்சம் வரை லஞ்சமாக கேட்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

'பஞ்சுமிட்டாய் போல தடை செய்யப்படுமா நைட்ரஜன் பிஸ்கட்?-அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவனின் வீடியோ

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
'Will Nitrogen Biscuits be Banned Like Cotton Candy'- Boy's Shocking Video

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன்  பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்தச் சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

திரவ நைட்ரஜனை பிஸ்கட் உடன் சேர்த்து சாப்பிடும் பொழுது புகைப்பது போன்று வாய் மற்றும் மூக்கில் இருந்து புகை வரும். இதை ஒரு ஃபன் ஆன உணவாக பல்வேறு பொது இடங்களில் மற்றும் சுற்றுலா தளங்களில் விற்கப்பட்டு வருகிறது. கோவை, திருச்சி, சென்னை தீவுத் திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பொருட்காட்சிகளில் நைட்ரஜன் பிஸ்கட் விற்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. திரவ நிலையில் மைனஸ் 196 செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் திரவ நைட்ரஜன் பிஸ்கட்டில் சேர்த்து பயன்படுத்துவது ஆபத்து என்கின்றனர் உணவுத்துறை வல்லுநர்கள்.

பொதுவாக உணவுப் பொருள்களை உறைய வைக்கவே ஆண்டாண்டு காலமாக திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கு திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டாலும் அது ஆபத்து நிறைந்ததாகவும் உள்ளது. ஒரே நொடியில் பொருட்களை உறைய வைக்கும் தன்மை கொண்டது. திரவ நைட்ரஜனை சிறிது திரவ நிலையில் எடுத்துக் கொண்டாலும் வயிற்றில் சென்று திரவ நைட்ரஜன் எவாபரேஷன் நடைபெற்று கடும் உடல் உபாதை ஏற்படுத்துவதோடு மரணத்திற்கும் இட்டுச் செல்லும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த அளவில் திரவ நைட்ரஜனை குறைவாக பயன்படுத்தும் பொழுது எந்த ஆபத்தும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியாகிய  இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அண்மையில் பஞ்சு மிட்டாயில் உள்ள நிறமி வேதிப்பொருள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என உறுதி செய்யப்பட்ட நிலையில் அதனை அரசு தடை செய்திருந்தது குறிப்பிடத் தகுந்தது.