சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்ட நபருக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.கர்ணா, செயலாளர் துரை.ராராயணன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டள்ளனர்.
அந்த அறிக்கையில்,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பாலின சமத்துவத்தையும், பெண்களின் பாதுகாப்பையும் வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திவரும் அமைப்பு. எங்கெல்லாம் பெண்கள், சிறுமிகள் பாதிக்கப்படுகின்றனரோ அங்கெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று உரிய தண்டனை பெற்றுத்தருவதற்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்திய இயக்கம் வாலிபர் சங்கம்.
இந்நிலையில், புதுக்கோட்டை நரிமேடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற நபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகரக்குழு உறுப்பினர் சென்றும் நாளிதழ் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகள் வந்ததைப் பார்த்து அதிர்சியடைந்தோம்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அனைத்துப் பகுதியில் உள்ள இளைஞர்களையும் திரட்டி இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக, அந்தந்தப் பகுதி மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திவரும் அமைப்பு. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் பல நூற்றுக்கண்ககான போராட்டங்களை சங்கம் முன்னெடுத்துள்ளது. நாங்கள் முன்வைக்கும் கோரிக்கையால் ஈர்க்கப்பட்ட அந்ததப் பகுதி இளைஞர்கள் பலர் தானாக முன்வந்து எங்கள் போராட்டங்களில் பங்கெடுத்து இருக்கின்றனர். அப்படி ஓரிரு முறை மேற்படி சுரேஷ் என்பவரும் எங்கள் போராட்டங்களில் பங்கெடுத்து இருக்கலாம். ஆனால், அவர் வாலிபர் சங்கத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லை.
இந்நிலையில், மேற்படி நபர் வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர் என காவல்துறை மூலமாக நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்திருப்பதாக அறிகிறோம். அதனடிப்படையிலேயே ஊடகங்களில் மேற்படி நபர் சுரேஷ் வாலிபர் சங்கத்தின் நகரக்குழு உறுப்பினர் என வெளியாகியுள்ளது. காவல்துறையின் பல்வேறு செயல்பாடுகளைக் கண்டித்து கடந்த காலங்களில் சங்கத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். இதற்குப் பழிதீர்க்கும் வகையில் இத்தகைய பொய்யான செய்தியை காவல்துறையினர் வெளியிட்டு இருப்பதாக கருதவேண்டியுள்ளது.
எனவே, மேற்படி நபர் வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர் என்கிற செய்தியை சங்கத்தின் மாவட்டக்குழு சார்பில் முற்றாக மறுக்கிறோம். மிகக்கொடூரமான தவறிழைத்த சுரேஷ் என்ற நபர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம். பாதிக்கப்பட்ட சிறுமிக்க உரிய மருத்துவ சிகிச்சையும், மனநல ஆலோசனையும் வழங்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், மேற்படி அந்த நபர் வலிபர் சங்கத்தின் நகரக்குழு உறுப்பினர் என்ற பொய்யான செய்தியை கசியவிட்ட காவல்துறைக்கும் கடும்கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். எங்களின் விளக்கத்தை ஊடகங்கள் ஏற்று செய்து வெளியிட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.