தஞ்சை வடக்கு மாவட்ட தினகரன் அணியின் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருக்காட்டுப்பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-
காவிரி நதி நீர் பிரச்சினையில் அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்ட தீர்ப்பால் கர்நாடக அரசியல் கட்சி தலைவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளில் கர்நாடக அரசால் வெற்றி பெற முடியவில்லை. போராட்ட குணம் கொண்டு போராடி காவிரி உரிமைகளை சுப்ரீம் கோர்ட்டு வரை கொண்டு சென்று வெற்றி பெற்று தந்தவர் ஜெயலலிதா.
பாராளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாக உள்ள அ.தி.மு.க. இந்த தீர்ப்பை எதிர்த்து பாராளுமன்றத்தை நடத்த விடாமல் செய்திருக்க வேண்டாமா? வீதியில் இறங்கி போராடி இருக்க வேண்டாமா? காவிரி டெல்டா மாவட்ட அமைச்சர்கள் ராஜினாமா செய்திருக்க வேண்டாமா? ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது காவிரி பிரச்சினையில் தலை குனிந்த கர்நாடகா இன்று கை கொட்டி சிரிக்கிறது.
தமிழகத்தில் எங்கு சென்றாலும் பொதுமக்கள் இந்த ஆட்சியை எப்போது வீட்டிற்கு அனுப்புவீர்கள்? என்று கேட்கிறார்கள். இந்த இயக்கத்தை அழித்து விடலாம் என்று சிலர் கனவு காண்கின்றனர். திட்டமிட்டு கட்சியை ஒழிக்க சிலர் முயலுகின்றனர். ஆனால் நாளை தேர்தல் வந்தாலும் தினகரன் அணி மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினர்.