/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ka21.jpg)
ஆகஸ்ட் 7 மதியம் 3 மணிக்கு காவிரி மருத்துவமனை முன் நின்று கொண்டிருந்த ஜென் Z இளைஞன் அவன். இன்னும் சரியாக சொல்ல போனால் கலைஞர் நான்காம் முறை முதல்வரான பதினைந்தாவது நாளில் பிறந்தவன். அங்கிருந்த சூழலே அவனுக்கு உணர்த்தியது இன்று இரவுக்குள் வரும் தகவல் அவனுக்கு மகிழ்ச்சியை தராது என்று.
அங்கு அவன் தன் தோழமைகளுடன் பேசிக்கொண்டு இருத்தாலும் அவன் மனம் அவனை அவனது குழந்தை பருவத்திற்கு இழுத்துக்கொண்டு இருந்தது.
அவனுக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது அவனது மூன்று வயதில் அதுவரை அவனுடனே இருந்த தாய் திடீரென காலை கிளம்பி சென்று மாலை திரும்பி வர தொடங்கினார்.
ஏன் இப்படி நடக்கிறது என்று அவனுக்கு புரியவே இல்லை. புரிந்துக்கொள்ள கூடிய வயதும் இல்லை. ஆனால் ஏன் அம்மா இப்படி போகிறாள் என்ற கேள்வி அவனுக்குள் எழுந்தது. அதை அம்மாவிடமே கேட்டுவிட்டான். அப்போது வீட்டில் இருந்த BPL தொலைக்காட்சியில் மஞ்சள் துண்டும் கருப்பு கண்ணாடியும் அணிந்திருந்த குள்ளமான ஒரு உருவத்தை காட்டி இவர்தான் எனக்கு வேலை தந்தார் என்றார்.
அந்த மூன்று வயது குழந்தைக்கு அவர் மீது கோபமே வந்தது. அதுவரை கூடவே இருந்த அம்மாவை சில மணி நேரங்கள் தன்னிடம் இருந்து பிரித்து விட்டதால், இப்படியாகவே அவனுக்கு கலைஞர் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால் தாய் கலைஞரை புகழ்ந்து பேச பேச அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமலேயே தன் தாய்க்கு கலைஞரை பிடிக்கும் என்பதால் அவனுக்கும் கலைஞரை பிடித்து போனது.
கலைஞரால் மூன்று வயதிற்கு சென்றிருந்த அவன் அங்கு எழுந்த வாழ்க வாழ்கவே டாக்டர் கலைஞர் வாழ்கவே என்ற கோஷத்தால் மீண்டும் கோஷமிட தொடங்கினான். இருந்தும் அவனுக்குள் தாய்ப்பால் போல ஊட்டப்பட்ட கலைஞர் என்ற மனிதன் அவனை மீண்டும் அவரின் நினைவுகளில் ஆழ்த்தினார்.
அவனின் ஐந்து வயது கலைஞர் தோற்றுவிட்டார் என்று அவன் அப்பா சொல்ல, அதை அவன் மனம் ஏற்கவே இல்லை ஏனெனில் அவனை பொறுத்தவரை கலைஞர் நல்லவர் நல்லதை மட்டுமே செய்யக்கூடியவர், இதை எல்லாம் தான்டி அவன் அம்மாவிற்கு அவர் வேலை தந்தவர். அப்படடிப்பட்ட மனிதனை தோற்கடித்த இந்த தமிழ் சமூகத்தின் மீது அவனுக்கு தீராத கோபம் வந்தது.
அந்த ஐந்து சிறுவனால் கோபப்படுவதை தான்டி என்ன செய்துவிட முடியும். அந்த கோபம் தீரும் முன்னே அவன் பீறிட்டு அழும் படியாக அவரை நள்ளிரவில் தர தரவென்று இழுத்து கைது செய்த ஜெயலலிதா மீது அவனுக்கு வன்மம் வந்தது. அவர் கைது செய்யப்பட்ட அந்த காலை விடியல் இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. தொலைக்காட்சியில் அந்த காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பு செய்யப்பட்டன. அந்த காட்சிகளை நினைத்து அவனே அறியாமல் விட்ட கண்ணீர் அவனை சுயத்தை நோக்கி அழைத்து வந்தது.
காவிரி மருத்துவமனை முன் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. உடனிருந்த நண்பரிடம் தகவல் எதிர்மறையாக வந்தாலும் நான் அழ போவதில்லை, இந்த பத்து நாட்களில் நிறைய அழுதுவிட்டேன் என்று சொல்லியபடியே அவனது பத்து வயதிற்கு அவன் நினைவுகளோடு சென்றான்.
ஆம் அவன் முதலும் கடைசியுமாக கேட்ட மு.கருணாநிதி என்னும் நான் அந்த ஆண்டில் தான் நிகழ்ந்தது. 2006 தேர்தலில் திமு கழக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியில் அமைந்திருந்தது. மேடையிலேயே ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய், 7000 கோடி ரூபாய் விவசாய கடன்கள் தள்ளுபடி என்ற திட்டங்களில் கையெழுத்திட்டார். ஏன் அப்படி செய்தார் என்று தெரியாமலேயே அவன் துள்ளினான்.
அந்த ஆட்சி காலத்தில் தான் அவர் சமச்சீர் கல்வியை கொண்டு வந்தார். அவன் பத்தாம் வகுப்பு போகும்போது சமச்சீர் கல்வியை கொண்டுதான் தேர்வு எழுத போகிறான் என்ற சந்தோஷப்ட்டான். ஆனால் அதற்குள் ஆட்சி மாற காட்சிகள் மாற தொடங்கின உச்சநீதிமன்றம் வரை சென்று அவரின் திட்டம் காப்பாற்ற பெற்றது. சமச்சீர் கல்வி பயின்று வந்த முதல் செட் என்ற பெருமை அவனுக்கு இப்போதும் உண்டு.
அந்த பெருமையோடு அவனிருக்க மணி ஐந்தை கடந்தது, காவிரி மருத்துவமனை முன்பு கூட்டம் பத்தாயிரத்தை தாண்டியது. அனைவருது கண்களிலும் ஏக்கம் நம் தலைவன் இந்த போராட்டத்திலும் வென்று வர மாட்டாரா என்று? இந்த ஏக்கத்தோடு அவன் தன் தலைவனின் வெற்றிக்காக ஏங்கிய 20 வயது நினைவுகளில் ஆழ்ந்தான்.
அவன் வாக்களிக்க போகும் முதல் தேர்தல் உதயசூரியன் சின்னத்திற்கு தான் தன் முதல் ஒட்டு என்று ஐந்து வயதிலேயே முடிவு செய்து வைத்திருந்தான். அவனிருக்கும் ஊருக்கு அவர் வேனில் பிரச்சாரம் செய்யுள்ளார் என்ற செய்தி அறிந்து எப்படியெனும் அவரை அருகில் சென்று பார்த்திட ஆசைப்பட்டான். அவருக்கு ஊரின் வாயிலில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை அறிந்த அங்கு சென்றான், பத்து மணிக்கு அவர் வருவதாக இருந்தது, இதோ கிளம்பிவிட்டார் இங்கு வந்துவிட்டார், அங்கு வந்துவிட்டார் என அருகிலிருக்கோர் சொல்ல சொல்ல அவன் பரபரத்தான்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pacha-1.jpg)
இந்த கூட்டத்தில் வேன் அருகே செல்லவதே கடினம் என்ற மூளை சொல்லியது. இல்லை இன்று எப்படியும் அவரை அருகில் பார்த்துவிடுவாய் என்று மனம் நம்பிக்கை தந்தது. கூட்டத்திலிருந்து 200 மீட்டர் முன் சென்று தனியாக நின்றுக்கொண்டான். அவரை வரவேற்க கழக தோழர்கள் வெடி வைக்க அதற்காக நிறுத்தப்பட்ட அவர் வண்டி தன்னந்தனியாக நின்றிருந்த அவனை நோக்கி அவன் தலைவன் கையசைத்தார். அவன் மட்டுமே அங்கு நின்றிருந்தான் அவனுக்கு மட்டுமே அவர் கையசைத்தார் என்பதை எண்ணி பல நாட்கள் அவன் தூக்கம் தொலைத்திருந்தான்.
ஆனால் அந்த தேர்தலிலும் வெற்றிக்கு பக்கத்தில் வந்து திமு கழகம் ஆட்சியை இழந்திருந்து மனமுடைந்து போனான். சில மாதங்களிலேயே அவர் உடல் நலம் குன்றியது. அவருடன் ஒரு புகைப்படம் எடுத்து அதை தன் வீட்டில் மாட்ட வேண்டும் என்ற பேராசை எப்போதும் அவனுக்கு இருந்தது. இந்த செய்தி அவனுக்கு தன் ஆசை சாத்தியப்படுமா என்ற ஐயத்தை தந்தது. எப்படியேனும் எடுத்துவிட வேண்டும் என எண்ணியிருந்தான்.
மணி ஆறரை கடந்திருந்தது அறிவித்துவிட்டார்கள் என்று கூட்டத்தில் ஒருவர் சொல்ல பீறிட்டு அழுதான். அவன் வாழ்க்கையில் தந்தை மறைந்த பின் எந்த குறையுமின்றி வாழ அவன் தாய் அடிக்கடி சொன்னது ‘இந்த வேலை கலைஞர் தந்தது’ என்று சொன்னதுதான். அதுதான் அவனுக்கு கிடைத்த வேலையை விட்டு அவனை உயர்கல்வி படிக்க வாய்ப்பு தந்தது. அவனை ஒரு மானமுள்ள சுயமரியாதைக்காரனாக வாழ வழி செய்தது. இந்த வாழ்க்கையே அவரிட்ட பிச்சை என்று அழுதான் தன் பாதுகாப்பை இழந்தவிட்டதாக எண்ணி அழுதான். தன் தந்தை மறைந்த அன்று இருந்த அதே நிலைக்கு சென்றான். அவன் மட்டுமல்ல தமிழகமே தந்தையை இழந்தாக தான் உணர்ந்தது. ஆம் தமிழகத்தின் தந்தை கலைஞர் மு.கருணாநிதி…
எஸ்.ஜே.பச்சமுத்து,
முதுகலை அரசியல் மாணவர்,
சென்னைப் பல்கலைக் கழகம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)