அமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டில் தமிழக அரசு சார்பாக 25 பேர் பங்கேற்பார்கள் என்றும், மாநாட்டில் பங்கேற்க தமிழ் அறிஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்,
அமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் உலகத் தமிழ் மாநாடு நடைபெறுகிறது. ஜுலை 4 முதல் 7ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. வட அமெரிக்க தமிழ்ச் சங்கமும், சிகாகோ தமிழ்ச் சங்கமும் இந்த மாநாட்டை நடத்துகின்றன. எங்களுடைய ஆதரவு இந்த மாநாட்டுக்கு உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக அரசு சார்பாக 25 பேர் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட உள்ளன.
ஜூலை 4ஆம் தேதி சிறப்பு பட்டிமன்றம், ஈழத் தமிழ் நாட்டியமும் மரபுகளும், தமிழ் இசை, இளைஞர் போட்டிகள், குறும்பட போட்டிகள், கங்கை கொண்ட சோழன் இராஜேந்திர சோழன் நாட்டிய நாடகம் நடக்க இருக்கிறது. ஜூலை 5ஆம் தேதி தமிழ் இசை, கவியரங்கம், இலக்கிய விநாடி வினா நடக்க உள்ளது. அன்று மாலை சிகாகோவில் ஐயன் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இயற்கையில் பிறந்த தமிழ் - இசைப்பெரும் நாட்டிய நாடகம் உடக்க உள்ளது என்றார்.