டிசம்பர் 23ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்த அரசாணையில், "தற்போது வேளாண்மை கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் தேவை அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, வேளாண் நிதிநிலை அறிக்கையில் கிருஷ்ணகிரியில் புதிதாக அரசுத் தோட்டக்கலை கல்லூரி தொடங்க அறிவிக்கப்பட்டது. வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி, 2021 - 2022 ஆண்டில் கரூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர், சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாடு ஆகிய இடங்களில் மூன்று புதிய அரசு வேளாண்மைக் கல்லூரிகள் துவங்குவதற்கு மாநில அரசு தலா ரூபாய் 10 கோடி வீதம் மொத்தம் ரூபாய் 30 கோடி நிதியினை ஒதுக்கும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி எம்.பி., தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கரூர் மாவட்டத்தில் புதிய வேளாண் கல்லூரி துவங்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கேட்டுப் பெற்றுவந்த மாவட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கும் கரூர் மாவட்ட மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளார்.