Skip to main content

குற்றவாளி கிடைத்தால்தான் இவரை விடுவோம்; அப்பாவியைப் பிடித்துவைத்திருக்கும் போலீஸ்? - கதறும் குடும்பம்

Published on 26/07/2024 | Edited on 26/07/2024
Alleging that the police are holding an innocent person instead of a criminal

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அடுத்துள்ளது திருவிதாங்கோடு. இப்பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். 35 வயதான இவர், பிளம்பராக பணி செய்து வந்தார். கடந்த ஜூலை 20 ஆம் தேதி திடீரென வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீசார் மகேஷ் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், மகேஷ் வீட்டில் 'மது பார்ட்டி' நடத்திய போது, அவருடன் இருந்த மூன்று நண்பர்கள் மகேஷ் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், கொலையில் தொடர்புடைய பெனட் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது தொடர்பாக பெனட்டின் மாமாவான மறவன் குடியிருப்பை சேர்ந்த துரை என்பவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், போலீசார் துரையை வெளியே 2 நாட்களாக விடவில்லை என்று குடும்பத்தினர் கூறுகின்றனர். இது குறித்து குடும்பத்தினர்  தக்கலை போலீசாரிடம் விளக்கம் கேட்டதற்கு, கொலையில் தொடர்புடைய பெனட்டை கைது செய்தவுடன்.. துரையை விடுவதாக போலீசார் வினோத பதில் அளித்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர். 

இதனால், போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற துரையை வீட்டுக்கு அனுப்பாத காரணத்தால், துரையின் மனைவி பானு, மகள் நிஷா, மற்றும் மருமகன் ஆன்றோ ஆகிய மூன்று பேர் திடீரென நாகர்கோவில் எஸ்பி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் அழைத்துச் சென்ற துரையின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டினர். இதையடுத்து, போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், நாகர்கோவில் எஸ்பி ஆபிஸ் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவே, துரையின் குடும்பத்தினர் வீடு திரும்பினர். 

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய துரையின் மகள் நிஷா, ''தக்கலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி தலைமறைவாக இருப்பதால், அவர் வரும் வரை.. நீங்கள் காவல் நிலையத்தில் இருக்க வேண்டும் என்று கடந்த இரண்டு நாட்களாக எனது அப்பாவை போலீசார் காவல் நிலையத்தில் அடைத்து வைத்துள்ளனர். வெளியே விடுங்கள் என்று கேட்டால், அதற்கு போலீசார் உரிய பதில் அளிக்காமல் உங்கள் மீது வழக்கு பதிவு செய்வோம் என்று மிரட்டுகின்றனர். எனது அப்பா துரைக்கு, ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் தக்கலை காவல் நிலைய போலீசார் தான் பொறுப்பு. விரைந்து கொலை வழக்கில் தொடர்புடைய உண்மை  குற்றவாளியை கைது செய்ய வேண்டும், அதற்கு முன்பு எனது அப்பாவை போலீசார் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்...'' என்று துரையின் மகள் நிஷா கோரிக்கை வைத்தார்.

சார்ந்த செய்திகள்