கிராமங்களில் நடத்தப்படும் ஒவ்வொரு திருவிழாவும் அர்த்தமுள்ள விழாவாகத் தான் இருக்கும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு வித்தியாசமான விழாக்கள் நடத்தப்படுவது வழக்கமான ஒன்று தான்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா என்றாலே குறைந்தது 50 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வதும் வழக்கம் தான். இந்த திருவிழாவில் ஆலவயல் நாடு செலுத்துவது என்பது தான் வித்தியாசமான திருவிழா.
ஆலவயல் நாட்டார் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளத்தில் தண்ணீர் குறைந்த நிலையில் உள்ள சேற்றில் இறங்கி உடல் முழுவதும் பூசிக்கொண்டு பஞ்சு மற்றும் வர்ண பொடிகளை உடலில் பூசிக்கொண்டு கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் தாரை தப்பட்டையுடன் செல்ல சேறு பூசியவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு தரிசனம் செய்வார்கள். இந்த நிகழ்ச்சியை காணத் தான் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
ஆலவயல் நாடு செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்த போது ஆயிரக்கணக்காண மக்கள் ஊர்வலமாக வந்தனர்.
விழாவில் கலந்துகொண்ட ஒரு பெரியவர் உடலில் உள்ள தோல் நோய்களை சேற்று குளியல் கட்டுப்படுத்தும் என்று வெளிநாடுகளில் சேற்றுக் குளியலை பணத்தை வாங்கிக் கொண்டு ரசாயணம் கலந்த சேற்றை பூசி குளிக்க வைக்கிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சேற்றுக் குளியலின் மகத்துவம் அறிந்து அதை திருவிழாவாகவே நடத்தி இருக்கிறார்கள். இந்த சேற்றுக் குளியலோடு நேர்த்திக்கடன் செலுத்தும் யாருக்கும் தோல் நோய் வந்ததி்ல்லை. அதனால தான் ஆலவயல் நாடு செலுத்துவதை காண இத்தனை கூட்டம் என்றார்.
இப்போது புரிகிறது தமிழர்களின் எந்த விழாவும் அர்த்தமுள்ளது என்று.