தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (38). தமிழக காவல்துறையில் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த பிப். 25ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்தார். அன்று இரவு தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, மொரப்பூர் வழியாக செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை சென்றார்.
இதற்காக ரயில்நிலையத்தில் பாதுகாப்பு பணியை மேற்கொள்வதற்காக சேலம் ரயில்நிலையம் கட்டுப்பாட்டில் உள்ள சேலம், தர்மபுரி, ஓசூர் ஆகிய இடங்களில் பணியாற்றி வரும் ரயில்வே போலீசார் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.
தர்மபுரி ரயில்நிலையத்தில் பாதுகாவல் பணியில் இருந்த போலீஸ்காரர் மோகனசுந்தரத்தையும் சேலத்துக்கு அழைக்கப்பட்டு இருந்தார். அதற்காக அவர் ரயில் மூலம் சேலம் வந்தார். சேலம் வரும்போது திடீரென்று ரயிலிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட சக போலீஸ்காரர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதும், சுய நினைவை இழந்திருப்பதும் தெரிய வந்தது. மன அழுத்தம் அதிகரித்ததால் இவ்வாறு நடந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிப். 27ம் தேதி காலை 6.30 மணியளவில் அவர் இறந்தார். சடலத்தைப் பார்த்து அவருடைய மனைவி சக்தி, குழந்தைகள் மாதேஸ்வரன், கஜேந்திர ரிஷி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
மோகனசுந்தரத்தின் சடலம், உடற்கூறாய்வு செய்யப்பட்டது. ஆனால், அவருடைய உறவினர்கள் திடீரென்று சடலத்தை வாங்க மறுத்தனர். ரயில்வே அதிகாரிகள் தேவையில்லாமல் மோகனசுந்தரத்தை அலைக்கழித்ததாலும், பணிப்பளு காரணமாகவும்தான் மன உளைச்சல் ஏற்பட்டு அவர் இறந்துவிட்டதாகக்கூறி காவல்துறை உயர் அதிகாரிகளுடன் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர். அவருடைய குடும்பத்திற்கு உடனடியாக 50 லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணியும் வழங்க வேண்டும் என்றும் கூறினர்.
காவல்துறை உயரதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். ஒருவழியாக சமாதானம் அடைந்த அவர்கள், பின்னர் சடலத்தைப் பெற்றுச்சென்றனர். சொந்த ஊரில் மோகனசுந்தரத்திற்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடந்தன.